Tuesday, April 25, 2006

கனடாத் தமிழரும் புலித்தடையும் 01


இந்த மாதம் அதாவது சித்திரை 08ம் திகதி கனடாவில் விடுதலைப்புலிகள் இயத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக கனேடிய அரசு தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இதன் விளைவாக கனடாவில் இவ்வியக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடையும் நிலைக்கு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மொன்றில் மாகாணத்தில் உள்ள உலகத்தமிழர் காரியாலயம் கனேடிய பொலிசாரினால் சோதனையிடப் பட்டுள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு ரொரண்டோவில் உள்ள உலகத்தமிழர் இயக்கத்தின் தலைமைக்காரியாலயம் ரொரண்டோ பொலிசாரினால் சோதனையிடப்பட்டு அக்கட்டிடத்தையும், அதற்குச் சொந்தமான நிலத்தையும் மச்சல் பட்டியால் சுற்றிக் கட்டிவைத்து, அங்கிருந்த ஆவணங்களையும், வேறுபொருட்களையும் பொலிசார் சோதனையிட்டதாக அதைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கனடாத்தமிழர்களில் ஒரு சாரார் மத்தியில் இச் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும், கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்திய அதே நேரம் இன்னொரு சாரார் மத்தியில் சந்தோசத்தையும், மனநிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளதையும் இங்கு உணரக்கூடியதாக இருந்தது.

இதற்கான காரணத்தை பார்ப்போமாகயிருந்தால், இன்றைய ஒரு சூழலில் அதாவது புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் தற்போது ஏற்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம், (அது தற்போது வேறு விதமாக இருப்பது துரதிஷ்டம்) ஜெனிவாவில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சுவார்த்தை, இது போன்ற பல விடையங்கள் சம்பந்தப்பட்டவர்கள் மத்தியில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இத் தருணத்திலா கனேடிய அரசு புலிகள் அமைபின் மீது இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்றும், இச்செயற்பாடானது கடும்போக்காளர்களை கூட்டுச்சேர்த்து ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவழிப்பதாக அமைவதால், மூன்று இலட்சத்திற்கும் அதிகமான கனேடியத் தமிழர்களின் உணர்வுகளை சிறிதேனும் கருத்தில் கொள்ளாது கனேடிய அரசு இவ்முடிவை எடுத்திருப்பது உலகத்தமிழர்களை வேதனை அடையச் செய்துள்ளது என்று அங்கலாய்கின்றனர்.

மறு பிரிவினரோ, ‘இனிமேல் பணம் கேட்டு இவ்வமைப்பினர் சார்பிபல் யாரும் வரமாட்டார்கள் என்று நின்மதி அடைகின்றனர்.

நாளாந்தம் தொழிச்சாலையிலும், உணவு விடுதிகளிலும் இயந்திரங்களோடு இயந்திரங்களாக உடலை வருத்தி, ஊரில் பட்ட கடனையும், வெளிநாடு வரக்கொடுத்த பணத்தையும் எப்படா கட்டி முடிப்பேன் என்று ஒவ்வொரு இரவினையும் நித்திரையின்றி தொலைத்துக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் கடைசி யுத்தத்திற்காக 2500 முதல் 10.000 வரை தரும் படி கேட்கும் இவர்களுக்கு நான் எதைக் கொடுப்பேன். என்று பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

‘நாங்களாக மனமுவந்து எங்களால் முடியுமான தொகையை இவர்களுக்கு கொடுப்பதில் எமக்கு எந்தக் கருத்து முரண்பாடும் இல்லை. ஆனால் எம்முடைய வருமானமோ வீட்டு வாடகைக்கு பணம் செலுத்த அல்லப்படும் போது எப்படி நாம் இவர்கள் கேட்கும் தொகையைக் கொடுப்பது? இருப்பவர்கள் விரும்பினால் கொடுக்கட்டும். அனால் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நியாயமாகப் படவில்லை.’ என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

புலிகள் சார்ந்த அமைப்புகள், கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களிடத்தில் பணம் வசுலிப்பதையும், அதுவும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நெருக்குவாரங்களைக் கொடுத்து ஒரு இக்கட்டான சூழலில் அவர்கள் பணம் வழங்குகின்றார்கள் என்பதை பல ஆதாரங்களுடனும், நீண்டகால புலனாய்வு அறிக்கைகள் ஊடாக கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், இவ்வாறான நடவடிக்கை கனேடிய அரசின் சட்டத்திற்கும், அதன் இறைமைக்கும் விரோதமான செயற்பாடாக அமைந்ததினாலேயே இவ்வரசு இம்முடிவை எடுப்பதற்கான காரணங்களில்; ஒன்று.

புலிகளுடைய சட்டம் இலங்கையில், அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு தெரிந்திருக்கவில்லைப் போலும்!

Friday, April 21, 2006

தொடரும் வன்முறைகள் யாரைத் திருப்திப் படுத்த...



யாழ்மாவட்டம் புத்தூரில் ஐந்து இளைஞர்கள் சுடப்பட்டு அவர்கள் உடல்கள் இராணுவ முகாமில் இருந்து ஐந்நூறு யார் தொலைவில் கிடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கொலைக்கு இராணுவத்தினரே முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவ்வ+ர் மக்களும், தமிழ் செய்தி ஊடகங்களும் தெரிவிக்கின்றன. ஆனால் இராணுவ தரப்பில் பேசவல்ல அதிகாரி இதை மறுத்துள்ளார்.

இலங்கையில், அண்மைய அமைதி முயற்ச்சிக்குப்பின்னர் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகள் இன்னும் பரவலாக்கப்பட்டு வருவதை இப் படுகொலைகள் மூலம் மேலும் அறியக்கூடியதாக உள்ளது.
இலங்கை இராணுவத்தினர், பொது மக்களிற்கு எரிச்சல் ஊட்டும் விதத்திலும், அல்லது அவர்கள் மீது வன்முறைகளை பிரயோகிப்பது போன்ற நடவடிக்கையால் மக்கள் படை என்னும் அமைப்பு இராணுவத்தினர் மீது ஆக்காங்கே கிளைமோர் கண்ணிவெடித்தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும், இதனால் மென்மேலும் இராணுவத்தினரின் அடாவடித்தனம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.
உண்மையில் இந்த மக்கள் படை என்பது யார் என்பது இன்னும் தெளிவுற அடையாளம் காணமுடியாத சூழலில் இவர்களுக்கு பின்னால் விடுதலைப்புலிகள் செயற்படுகின்றார்கள் என்பதை களநிலவரங்களில் இருந்து அறியக் கூடியதாக உள்ளது.

அண்மைக்காலமாக புலிகளின் புதிய முயற்சியாக பொது மக்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சி வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு அவை மேலும் விரிவாக்கப்பட்டு பெரும்தொகையான மக்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறிய செய்திகளை இணையத்தளச் செய்திகள் ஊடாக அறியக் கூடியதாக இருந்தது.

புலிகளைப் பொறுத்தவரை தாங்கள் மட்டுமே இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடுத்துபவர்களாக அல்லது எதிரானவர்களாக காணப்படுவதை விட ஒட்டு மொத்த தமிழ் மக்களுகம் இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கும் எதிரானவர்களாக வெளிக்காட்டப்படுவதையே புலிகள் மிகவும் விரும்புகிறார்கள். இதில் உள்நோக்கு அரசியல் புலிகளுக்கு இருப்பதைக் காணலாம்.

ஆதாவது பலஸ்தீன போராட்டத்தை நாம் பார்போமாக இருந்தால் அங்கே இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் தமது கைகளுக்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு இஸ்ரேலிய இராணுவதிற்கு எதிராக போராட்டம் நடத்துவதை நாம் அன்றாடம் தொலைக்காட்சி செய்திகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. அதிநவீன இராணுவ கவசவண்டிக்கு முன்பாக சிறுவர் முதல் பெண்கள், முதியோர்கள் என்று பாரபட்சமின்றி கற்களை வீசி தமது எதிர்பினைக் காட்டுவார்கள். இதையே புலிகளும் தமிழ் மக்களிடம் எதிர்பாக்கின்றார்கள். அல்லது மக்களைத் தூண்டுகிறார்கள். இன்றைய சூழலில் இது ஒட்டுமொத்த தமிழ் மக்கள் போராட்டமாக சர்வதேசங்களுக்கு காட்ட வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்துள்ளது.
ஈழப்போராட்டமானது தமிழ்மக்கள் போராட்டமாக 80பதுகளிலேயே பரவலாக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அனால் எமது விடுதலைப்போராளிகள் அன்று அதைச் செய்ய தவறியதால், இன்று தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான இடைவெளியை மறுக்க முடியாது.

தற்போதைய சூழலில் புலிகள், மக்கள் படையை வளர்தெடுக்க முயற்சிக்கும் அதே நேரம் சிங்கள தேசத்திலும் மக்கள் படைக்கெதிராக பேரினவாதிகள், அதாவது ‘காடையர்’கள் என்று தமிழ் சுழலில் பரவலாக அழைக்கப்படுகின்ற சிங்கள வன்முறையாளர்களை உருவாக்க சிறிதும் தயங்கமாட்டார்கள். இதன் வெளிப்பாட்டின் ஒரு வடிவமே அண்மையில் திருகோணமலையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறையாகும்.

ஆகவே இவ்வாறான வன்முறைகளை மென்மேலும் வளர்வதற்கான சூழலை உருவாக்குவதா? அல்லது இன்று சர்வதேச அரங்கில் தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் அரங்கேறியிருக்கும் தற்போதைய சூழலை மேலும் விரிவாக்க ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதா என்பதை புலிகள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா?

Saturday, April 15, 2006

நெஞ்சு நிமித்தல்.....


சென்ற வாரம்; விடுதலைப் புலிகள் அமைப்பினை கனடா அரசாங்கம் தடைசெய்து, பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் புலிகளையும் சேர்த்துக்கொண்டுள்ள செய்தி யாரும் அறிந்ததே.

புலிகளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுவதற்காக கனடாவின் தற்போதைய கென்சவேட்டிவ் கட்சி அரசாங்கம் பல காலமாக அப்போது ஆட்சியில் இருந்த லிபரல் கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது.

கனடாவில் 250.000க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் புலிகள் ஆதரவாளர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சென்ற வருடம் ரொரண்டோவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்தை தமது கைகளில் தாங்கியிருந்த மக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டினையும் பார்க்கும் போது அதை உணரக்கூடியதாக இருந்தது.

புலிகளோடு மிகத் தொடர்புடைய உலகத்தமிழர் இயக்கமும், அதன் வெளியீடான “உலகத் தமிழர்” பத்திரிகையின் தலைமைக்காரியாலயமும் கனடாவில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. உலகத்தமிழர் இயக்கத்தின் கிளைப்பரிவினரே கனடாவில் விடுதலைப்புலிகளுக்காக பணம் வசூலிப்பவர்கள். இவர்கள் பணம் வசூலிக்க, தமிழர் வீட்டிற்கோ அல்லது தமிழர் நிறுவனங்களுக்கோ செல்லும் முன் அவர்கள் அல்லது அந்நிறுவன உரிமையாளர் தொடர்பான பலமான, பலவீனமான தகவல்களை திரட்டியும் அவர்களோடு எவ்வாறான கோணங்களில் கதைக்க வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்வதை அவர்களின் செயற்பாடுகளில் இருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது. பல இடங்களில் நட்புரீதியாகவும், நாகரீகமாகவும் பொதுமக்களுடன் நடந்து கொண்டதாகவும், சில இடங்களி;ல் அதிகாரத்துடனும், எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் இருந்து அறியக் கூடியதாக இருந்தது.

முழுவிருப்பத்துடன் பணம் வழங்கியவர்கள் ஒரு புறம் இருக்க அனேகமானவர்கள், தமக்கும் ஈழத்தில் வாழும் தமது நெருங்கிய உறவினர்கள் காரணமாகவும், ஈழத்தில் இருக்கும் தமது அசையா, அசையும் சொத்துக்கள் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பயச்சூழலே அவர்களை பணம் வழங்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கியது.

அண்மையில் நண்பர் ஒருவரிடம் கதைத்தபோது அவர் சொன்னார். ‘தானும் புலிகளுக்கு 2500 கனேடிய டொலர்கள் கொடுத்ததாகவும், தனக்கு அப்பணம் கொடுக்கும் அளவிற்கு வசதிகள் இல்லை ஆனால் தனது உறவினர் ஒருவரின் திருமணம் ஈழத்தில் நடைபெற இருப்பதாலும் அதற்கு தான் கட்டாயம் செல்லவேண்டியிருப்பதால், இங்கு பணம் கொடுத்தால் தானே அங்கு பிரச்சனையில்லாமல் பேய்வர முடியும்? அதனால் கொடுத்தேன்’ என்று. (இப்போ அவர் “பின்நம்பர்”க்கு ஓடித்திரிகிறார்)

புலிகளும், புலிகளைச் சார்ந்தவர்களும் தமது அதிகாரப்போக்கினை எல்லா மட்டங்களிலும் பிரயோகிப்பது, அவர்கள் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அறியாமையையே வெளிக்காட்டுகிறது. இது புலிகளுக்கு மட்டுமான ஒன்றல்ல மாறாக தமிழ் சமூக சூழலில் காணப்படுகின்ற ஒரு போக்கு இதை இன்னொரு வகையில் சொன்னால் ‘நெஞ்சு நிமித்தல்’.

இந்த நெஞ்சு நிமித்தல் எல்லா சமயங்களிலும் கைகொடுக்காது இதை புலிகளும், அவர்கள் சார்ந்தவர்களும் உணரவேண்டும். உணரத் தவறியதன் ஒரு வெளிபாடே புலிகளை கனடாவில் தடைசெய்த காரணிகளில் ஒன்று என்பது கலப்படம் அற்ற உண்மை.