Sunday, July 01, 2007

எடுபடாத பல குரல்களின் வெளி!


அ.மங்கை என்று அழைக்கப்படும் பத்மா வெங்கட்ரமணன், சென்னை ஸ்ரெல்லா மெரீஸ் கல்லூரியின் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். கடந்த இருபது ஆண்டுகளாக நாடகத்துறையில் நாட்டத்துடன் ஈடுபட்டுவரும் இவர், பாடசாலை மாணவர்களுக்கும், சமூகசேவை நிலையங் களுக்கும் சென்று நாடகப்பட்டறைகளை நாடாத்தி வருவதோடு, பல நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார். தொரான்டோவில் இடம்பெற்ற 2வது தமிழ் இயல் மகாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் அரங்கக்கலைகள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தார். அத்தோடு கனேடிய நாடகக் கலைஞர்களுக்காக நாடகப்பட்டறையை நாடத்தினார். இவரின் உடல் எண்ணிக்கை என்ற நாடகத்தை நாடக விரும்பிகளுக் காக நடாத்தியும் காட்டினார். அண்மையில் ஈழப் பெண்கவிஞர்களின் கவிதை களை ‘பெயல் மணக்கும் பொழுது’ என்று தொகுத்து வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் தொரண்டோ வந்திருந்தபோது ‘வைகறை’ க்கு வழங்கிய நேர்காணல்.

1. உங்களின் அரங்க / வீதி நிகழ்வுகள் பற்றியும், இ;த் துறையை நீங்கள் தெரிவு செய்ததின் நோக்கம் பற்றியும் சுருங்கமாக சொல்லுங்கள்?

அரங்கத்தில, நாடகத்தில எல்லாம் தெரியும் என்ற முனைப்போட நிச்சயமா நான் வரல்ல. முதல்ல நான் வந்தது குறிப்பா பெண்கள் அமைப்பு சார்ந்த, ஒட்டடுமொத்தமா இடதுசாரி அரசியல சார்ந்த அமைப்புகளோட சேர்ந்து வேலை செய்வதற்கான ஒரு முனைப்புக் கிடைச்சது. இப்ப அதுக்குள்ள இருந்து வேலை செய்யும் போது, கூட்டம் போடுறதோ அல்லது பேசிக்கொண்டே இருப்பது அது ரொம்ப One way trafic ஆக இருந்தது எனக்கு. இன்னொன்று ஒரு சில விசயங்கள மனசில பதியிறமாதிரி சொல்லுறதிற்கு இந்த மாதிரி கலை நிகழ்ச்சிகள் ஒரு வலுவான சாதனமாக பட்டிச்சு. முதல்ல பாடல்களாகச் செய்தோம். அப்புறம் கொஞ்சம் அந்த மாதிரி. 80களில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா அளவிலேயே ஒரு அரசியல் சார்ந்த, வீதி நாடகங்கள் சார்ந்த ஒரு Activisms என்கிறது ரொம்ப நல்ல…. குறிப்பாக south Indiaவில Emergency க்கு அப்புறமே தொடங்கிச்சு. எனவே தணிக்கைகளை மீறி செயல்படுவதற்கு பெரிய வசதிவாய்ப்புகள், பிரச்சாரங்கள், விளம்பரங்கள், செலவுகள் இதெல்லாம் இல்லாமல் செய்வதற்கான ஒரு வடிவம் என்று பார்த்தா, மனித உடம், மனிதக் குரல், மனிதனுடைய உணர்வு, மனம், அதுசார்ந்த விசயங்கள் ரொம்ப வேகமாக இருந்தது. அப்ப 80களில நாங்களும் அதற்குள்ள போனம். அப்ப அரசியல் வேலைகளுக்கான ஒரு பகுதியாகத்தான் என்னுடைய அரங்க நிகழ்வுகள் தொடங்கிச்சு என்று நான் நினைக்கிறன்.


2. இன்றைய சூழலில் நவீன தொடர்பு சாதன ஊடகங்கள் இருக்கும் போது மேடை நாடகம், வீதி நாடகங்கள் ஊடாக எவ்வளவு தூரம் உங்கள் கருத்துக்கள் பரவலாக மக்களைச் சென்றடையும் என்ற சந்தேகம் பற்றி….?

எண்ணிக்கை அளவில வைச்சுப் பார்த்தீங்கென்னா தொலைக்காட்சி அளவிற்கு சினிமான கூடப்போகமுடியாது. அதான் நிஜம். (டி.வி.டியில பார்க்கிறது வேற) ஆனா ஒரு அனுபவம் என்று பார்க்கும் போது.. அரங்கம் கொடுக்கக் கூடிய அனுபவம் அந்த நேரடியாக அதாவது வேர்கிறது என்றால் அந்த வேர்வையை பார்க்கிற ஒரு வாய்ப்பு. பெருமூச்சு விட்டதென்றா மார்புகள் ஏறி இறங்கிறத பார்கிக்றது. அதாவது நேரடியாக தன்னை மாதிரி இரத்தமும் சதையுமான ஒரு நபர் இந்த உணர்வுகளை வெளிக்காட்டுகிறார் என்கிற அனுபவத்தை தருவது நாடகம் மட்டும் தான். Even நடனத்தில் எல்லாம் அது கொஞ்சம் stylish ஆகிறது. நாடகத்தில நம்ம ஒயிலாக்க வடிவத்தில செய்தாக்கூட அது வந்து ஒரு சக மனிதனின் நேரடியாக கண்னாலும், காதினாலும், மனதாலும் உணரக்கூடிய ஒரு அனுபவத்தைத் தருவது அரங்கம் என்று சொல்லலாம். என்னைப் பொறுத்த வரை அந்த Medium த்தை யாரும் Over come பண்ண முடியாது. அரங்கத்தை எதுவுமே Replace பண்ண முடியாது. அதனுடைய சில அம்சங்களை வேற வேற சாதனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. நீங்கள் சார்ந்த அல்லது நம்பும் அரசியல் ஊடாக சமூகத்தில் ஒதுக்கப்படும் / ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அரசியல் சார்ந்த, அறிவு சார்ந்த, கோட்பாடு சார்ந்த புரிதல் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஏழை சொல் அப்பலம் ஏறாது என்கிற மாதிரி மேடையில் எடுபடாத பல குரல்களை வெளியில கொண்டு வருவதற்கு அரங்கக்தை ஒரு பெரிய ஊடகமாக பயன்படுத்துவதில எனக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. அதில பிரதானமான குழுவாக எனக்கு கண்ணில படுகிறது பெண்கள். இப்போ பெண்களின் குரல் என்பதோ அல்லது பெண்களின் இருப்பு என்பதோ இங்கே இருக்கக் கூடிய தந்தைமை ஆதிக்க சமூதாயத்தினுடைய கட்டமைப்பில தான் உருவாகிறது. அப்ப ஒரு பெண் எப்படி நடக்கணும் என்கிறதக்கூட அவங்க தீர்மானிக்கிறாங்க அதே மாதிரி நாங்கள் நடக்கிறம். நிஜமா நாங்கள அந்த மாதிரி நடகிறமா என்கிறது பெண்ணாக இருக்கிறவ யோசித்துக் கூட பார்கிறதில்லை. இப்படி இருந்தால் தான் நீ பெண்ணா அங்கீகரிக்கப்படுவாய் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் அதே சிக்கல்கள் இருக்கின்றது. ஆண் என்றால் இப்படித்தான் நடந்து கொள்னும். ஆண் என்றால் அழக் கூடாது. “Boys don’t cry” என்ற படம் எல்லாம் வந்ததில்ல அப்ப அந்த பாலினம் சார்ந்த புரிதலோட கூடிய ஒரு Voice நாம அரங்கத்தில பழகவேடியதாக இருக்கிறது. அதே மாதிரி இப்ப வந்து சாதி ரீதியாக ஒடுக்குமுறை இருக்கிறது. தமிழ் நாட்டு அரங்கத்தைப் பொறுத்த வரை ‘தப்பாட்டம்’ என்ற ஒரு உடைப்பைக் கொண்டு வந்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அது ஒரு சாதியம் சார்ந்த ஒரு கலையாக இருக்கு. இழிவைக் குறிக்கிறதாக இருக்கு, சாவோடு ஒட்டியிருக்கிற சடங்கு சார்ந்ததாக இருக்கிறது. ஆண்களால் மட்டுமே ஆடப்படுகிறது. இப்படியெல்லாம் பல தடங்கல்கள் இருந்தாலும் கூட அது ஒரு போர்ப்பறையாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அது என்னுடைய இசை. அந்த இசையை நாம இழக்கக் கூடாது அப்படி என்கிறமாதிரி. அப்படித்தான் அரவாணிகளுடைய சிக்கல்களையும் நான் பார்க்கிறேன். ஒரு ஆணாக இல்லாமல், பெண்ணா இல்லாமல், இரண்டாகவும் இருக்கக் கூடிய அல்லது இரண்டும் கெட்டானாக இருக்கக் கூடிய ஒரு வாழ்க்கை வாழக்கூடிய அவங்களுடைய குரல்.
அப்போ விழிம்பில அல்லது ஒதுக்கப்பட்டோராக, அம்பலம் ஏறாத சொற்களில இருக்கிறவங்களுக்கு மேடை வந்து ஒரு வாய்பாக அமையும் என்று நான் நினைக்கிறன்.


4. உங்களுடைய அரங்கக் குழுவில் ஆண் / பெண் கலைஞர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். அவர்களும் அரசியல், கருத்து ரீதியான இணைந்து கொண்டவர்களா? எப்படி?

முதல்ல அமைப்பு சார்ந்து செய்யும்போது அமைப்பில இருக்கக் கூடிய உறுப்பினர்களைக் கொண்டு தான் நாம கலைக்குழுவில உறுப்பினர்களாக எடுக்கிறம். ஒரு கொள்கை ரீதியாகவோ அல்லது தலித்துகளுக்கு சார்பானதாகவோ அரசியல் தன்மை உடையவர்கள் குழுவிற்குள்ள வர்ராங்க என்று நாம ஊகிக்கின்றோம். ஆனா உண்மையில் நீங்கள் நாடகத்தில ஒத்திகையில, நாடகம் செய்யும்போது நமக்குக் கிடைக்கிற அனுபவத்தில இருந்து தான் நமக்கு அவங்கவங்கட சுயநிறம் தெரியும். அதனால எனக்கு உண்மையில இந்த அரசியல் உனக்கு இருக்கா இல்லையா என்றெல்லாம் தராசு போட்டு பார்க்கிறதில எனக்கு நம்பிக்கையில்ல. குறிப்பா புநனெநச வந்து நான் இன்னைக்கு Feminists என்று சொல்லி இன்னைக்கு இருக்கிற மாதிரி ஐம்பது வருசத்திற்கு இருப்பன் என்று சொல்லி எதிர்பார்க்கவும் முடியாது. அந்த Concept மாறிக்கிட்டே இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிக்கலை மையப்படுத்தி நாடகம் செய்வதென்றா அதில் பங்கெடுக்கின்ற கலைஞர்களுக்கு அந்த Issues பற்றின ஒரு Broad ஆன Agreement இருக்கனும் என்று நான் நினைக்கிறன். இப்ப ஒரு சுற்றச் சூழழுக்கு எதிரான ஒரு ஆள் ‘குறிஞ்சிப்பாட்டு’ போன்ற ஒரு நாடகத்தைச் செய்ய வந்தால் எனக்கு அதில சிக்கல் வரும். அல்லது ஒரு பெண்ணுடைய எழுத்த மட்டமாக நினைக்கிற ஆள் ‘ஒளவை’ நாடகத்தில வந்து செய்தால்… செய்யவும் முடியாது என்று நான் நினைக்கிறன். நிஜமாகவே நம்புறன் மேடையில பொய் சொல்ல முடியாது. உண்மையில மேடையில நடிக்கிறது என்கிறது வந்து நம்மள அம்மணமா காட்டுறதுதான். உன்னுடைய எல்லா உணர்வுகளையும் அப்பட்டமா வெளியில சொல்லுவதற்கான ஒரு இடமாத்தான் அது இருக்கிறது. அங்க ரொம்ப மறைச்சு பஞ்சோந்தியாக இருக்க முடியாது என்று தான் நினைக்கிறன். அதனால கண்டிப்பாக அந்த அரசியல் சார்ந்த அறிவு என்பது நான் எடுத்து கொள்கிற Textக்கும் அது சார்ந்த அரசியல் புரிதல் என்பதும் அவசியம். இப்ப அரவாணி பற்றிச் செய்யும் போது எனக்கொண்ணும் தெரியாது. அதைக் கற்றுக்கொள்ளாமல் நான் அதை செய்யக் கூடாது என்று நான் நினைக்கிறன்.


5. பெண் சிசுக் கொலைக் எதிராகவும், அரவாணிகளின் உரிமைக்காவும் நீங்கள் வேலை செய்கின்றீர்கள். தமிழச் சூழலில் அரவாணிகளை எப்படிப்பார்கிறார்கள்? அல்லது நடத்துகிறார்கள்?

தமிழ்ச் சமூகத்தினுடைய வெளிப்பாட்டிற்கு உரைக்கல்லாக நாம மீடியாவையும், திரைப்படத்தையும் எடுத்துக்கிட்டமென்றால் அதவிட அதிகமான இவங்களை கேவலப்படுத்திறது வேற எதுவும் இல்லை. அதுதான் Majority வான point of view வாக இருக்கிறது. தெருவில அவங்க நடக்க முடியாது, சேர்ந்து படிக்கிறவங்களால வாற தொல்லைகள் கொஞ்சம் கூட. அதெல்லாம் உண்மையில சொல்லிமாளாது. பல நேரங்களில பாலியல் வன்முறை உட்பட எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறவங்களாகத் தான் அந்த அரவாணிகள் இருக்கிறாங்க. ஆனா இப்ப வந்து எயிட்ஸ் தொடர்பான விழிப்பு உணர்வு காரணமாக என்னவோ இவங்களையும் ஒரு ஜீவிகளாக அங்கிகரிக்கின்ற நிர்ப்பந்தம் வந்திருக்கு. அப்ப இவங்களுக்கு ஒரு Presents இருக்கு என்பதை இன்றைக்கு தமிழ்ழ வந்து ஒத்துக்கிட்டாங்க என்று தான் நான் நினைக்கிறன். இருந்தாலும் அதை அங்கீகரித்திட்டாங்க என்று சொல்ல முடியாது.


6. அண்மைக்காலமாக பெண் மொழியின் தேவை பற்றி பரவலாக பேசப்படுகிறது. அதன் தேவை, முக்கியத்துவம் பற்றி உங்கள் கருத்து என்ன?

உண்மையில் பெண்மொழி பற்றிய விவாதம் வந்து theoretical லாக பெண்கள் தொடர்பான விசயம். அது அல்ல. இது வந்து மொழிக்குள்ள இயங்கக் கூடிய ஒரு படுமோசமான பாலியல் பாராபட்சத்திற்கு எதிராக ஆண்களும், பெண்களும் தொடுக்க வேண்டிய ஒரு யுத்தம். உண்மையிலலேய ஒரு பெரிய யுத்தம். கொச்சையாக பெண்ணைப்பார்க்கிற பார்வையில் இருந்து சுயமதிப்பு சார்ந்த சிந்தனைகள் இல்லாம ஒரு பண்டமாக பெண்ணை வர்ணிக்கிறதில இருக்கு. பெண்ணைப்பற்றிய சிந்தனையில் இருக்கு. அது ஆண், பெண் இரண்டு தரப்பிலும் இருந்து வருகுது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக பெண்கள் அனுபவம் சார்ந்தும், தங்களுடைய உயிரில் சார்ந்த அனுபவங்கள் மூலமாகவும் தன்னுடைய மொழியைப் பற்றி பிரக்ஞையோட அவங்க பயன்படுத்தினாங்கென்டா புதிசான ஒரு மொழிய, ஒரு யாப்ப நம்மளால கண்டு பிடிக்க முடியும் என்ற ஊகத்தில தான் நாம செயல்படுறம். ஆனா இதில வந்து பெண்ணாப் பிறந்தவங்கதான் செய்ய முடியும் என்பதோ அல்லது பெண்ணாப் பிறந்த எல்லாரும் செய்யமுடியும் என்கிறதோ எனக்கு ஒப்புதலே கிடையாது. ஏனென்றா அவ்வளவு தூரம் ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில நாம எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆதனால பெண்மொழி குறித்த உரையாடல் என்பது ரொம்ப ஆரோக்கியமாக இரண்டு தரப்பிலும் வைக்கப்பட வேண்டிய ஒன்று. புதிதான ஒரு மொழி என்பது கட்டாயம் தேவை என்று நான் நினைக்கிறன். மொழியுடைய ஆதிக்கம் சார்ந்த கட்டமைப்பை உடைச்சிட்டு வரக்கூடிய ஒரு புதிய மொழி நம்ம எல்லாருக்கும் வேண்டும் என்று நான் நினைக்கிறன்.


7. தமிழ் மரபும், பண்பாடும் ஆண் / பெண் சமத்துவத்திற்கு தடையாக இருக்கின்றனவா? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

இந்த மரபு, பண்பாடு என்பது எதை தமிழ் மரபு, பண்பாடு என்று குறிக்கிறதில இருந்து வந்திருக்கும். இப்ப வந்து தமிழ் பெண், கற்பு உண்மையிலே அதுக்கு என்ன பொருள் என்றே எனக்கு தெரியல. இப்போ தமிழ் கற்பு என்று சொன்னா தமிழுக்கென்று தனியா சாயம் puசப்பட்ட ஒரு கற்பு இருக்கா என்று எனக்குத் தெரியல. இப்ப குஷ்புவினுடைய வழக்கு வந்த போதெல்லாம் ரொம்ப கொடுமையாக ஏதோ தமிழருடைய கற்புணர்வை அவ குத்திட்டாங்க என்கிற மாதிரி பெரிய போராட்டங்கள் எல்லாம் அவங்களுடைய Statementக்கு எதிராக வந்திச்சு. அப்ப அதெல்லாம் எனக்கு ஒரு பங்கர கற்பிதமாக தெரியுது. இது பெண்ணை முடக்கி வைப்பதற்கான கற்பிதமாக இருக்கு. அனால் இதற்கு காரணம் தமிழ் மரபில்ல. மாறாக பிற்போக்கான பார்வை சார்ந்த விசயமாக தான் நான் பார்க்கிறன்.உண்மையில ஒளவையைப் படிச்சவங்க, அந்தக் காலத்திலேயே காதல் உணர்வையும், காம வேட்கையையும் ரொம்ப இயல்பாகவும், எந்தவித கூச்சநாச்சமும் இல்லாமல் பேசின குரல் ஒளவையினுடைய குரல். அல்லது ஒரு பெண்ணுக்கு வந்து கனிகை வாழ்வும் வேண்டாம், இல்வாழ்வும் வேண்டாம் துறவு வாழ்க்கையே வேண்டும் என்று சொன்ன பிம்பம் மணிமேகலை. இதெல்லாம் நமக்கு தமிழிலதான் கிடைக்கிது. அப்ப இப்படி இருக்கும்போது எந்த மரவை நீங்கள் தமிழ் மரபு என்று சொல்லுறீங்க என்ற கேள்வி எனக்கு இருக்கு. இன்னொன்று மரபோ, பண்பாடோ என்று சொலுறதெல்லாம் வந்து ஒரு பெட்டிக்குள்ள போட்டு யாரோ ஒருத்தர் தீர்மானிக்கிற ஒரு சட்டகத்திற்குள்ள அடையவே அடையாது. அது Dynamic. ஒவ்வொரு நேரமும் மாறுபடும். உண்மையிலேயே ஒரு இயங்கியல் ரீதியான புரிதல் இருக்கிறவங்க இந்தக் கட்டத்தில இருந்து இன்னொரு கட்டத்திற்கு போகனுமே தவிர பின்னாடி திருப்பி எடுக்கிறத்திற்கான முயற்சியை அனுமதிக்கவே முடியாது என்று நான் நினைக்கிறன். எனக்கு நியமாகவே தமிழ் பெண் என்பதற்கு விளக்கம் தெரியல. தமிழ் பேசுகிற பெண் என்றால் எனக்கு விளங்குது. நான் தமிழ் மொழி சார்ந்த குடும்பத்தில பிறந்திருக்கிறன், தமிழ் நாட்டில நிற்கிறன். அதனால எனக்குத் தமிழ் தெரியுது. ஆனால் தமிழ் பெண் அப்படி என்று தனியான அங்க இலட்சணங்கள் எல்லாம் இருக்கா என்று எனக்குத் தெரியல. அதுக்கு பின்னாடி நீங்கள் அடக்கஒடுக்கம், அதிர்ந்து பேசாம இருக்கிறது, புருசனுடைய காலத்தொட்டுக் கும்பிடுகிற பண்பாடு எல்லாம் என்றைக்குமே நம்முடைய பண்பாடாக என்றைக்குமே இருந்ததில்லை. பார்க்கப்போனல் பங்கரமான பார்ப்பனியம் சார்ந்த ஒரு பண்பாடு. கணவன் இறந்தவுடன் மனைவியைப்போட்டு சிதையில கொழுத்தனம் என்று சொல்லுறது பார்ப்பனர்களுடைய வழக்கம். இதை வந்து தமிழர்களுடைய மரபு, பண்பாடு சார்ந்து கொண்டு வரவேண்டும் என்பது எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை.


8. அண்மையில் ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை “பெயல் மணக்கும் பொழுது” என்று தொகுத்து வெளியிட்டிருக்கிறீங்க. அதன் நோக்கம் பற்றி சொல்ல முடியுமா?

பொதுவாக பெண் படைப்பாளர்கள் தொடர்பான ஒரு உரையாடல் வலுவாக வந்துகொண்டிருக்கிற காலம் இது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில பெண் கவிஞர்களுடைய வெளிப்பாடுகள் பற்றி நிறைய சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கு. அப்ப அண்டையில இருக்கக் கூடிய நாடான ஈழத்தில் இருந்து எழுதக்கூடிய பெண்களுடைய கவிதைகள். உண்மையிலேயே இதில நான் தொகுத்திருப்பது 86க்கு பின்னரான அதாவது “சொல்லாத சேதி” தொகுப்பிற்கு பின்னர் வந்தவைகள். அந்த வகையில் மிகவும் நெருக்கடி வாய்ந்த சூழலில இன்றைக்கு உலகெங்கிலும் பரவியிருக்கக் கூடிய ஒரு சமூதாயமாக, வீடையும், நாட்டையும் தொலைத்த ஒரு சமூதாயமாக இருந்து கொண்டிருக்கிற ஈழத்தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடைய வெளிப்பாடக இவை இருக்கின்றன. அப்ப கிட்டத்தட்ட வாழ்வா, சாவா என போராட்டம் நடந்துகொண்டிருக்கிற நேரத்தில கவிதை எழுதனும் என்கிற முனைப்பு இவங்களுக்கு வருவது என்பதும், அந்தக் கவிதையே அவங்களுடைய வெளிப்பாட்டிற்கான ஊடகமாக இருக்கிறது என்பதும் உண்மையிலேயே எனக்கு வியப்பைத் தருகிறமாதிரி இருக்கின்றது. அதே சமயம் எரிகிற வீட்டுல பிடுங்கினது இலாபம் என்கிறமாதிரி இப்ப வந்து உலகெங்கிலும் பரவியிருக்கிற காரணத்தினால ஈழ என்கிற அடைமொழியைச் சேர்த்தா எதை வேண்டுமானாலும் விற்று விடலாம் என்ற நிலைமையும் வந்துகிட்டிருக்கு. இப்ப தமிழகத்திலேயே நிறைய தொகுப்புகளும், எழுத்துகளும், நிறைய விசயங்களும் நடந்துகிட்டிருக்கிறது எனக்கு விளங்குகிறது. அதனால் தான் இதைத் தொகுக்கும் போது பெரிய பதிப்பகம் சார்ந்து போகாமல், ஒரு சிறு பதிப்பகமாக இந்தப் பெண்களுடைய எழுத்து அல்லது படைப்புலகத்தை ஒரு பெண்ணியம் சார்ந்த சிந்தனையோட பொருத்திப்பார்க்கக் கூடிய ஒரு Discourse குள்ள வரணும் என்றுதான் நான் இந்தமாதிரியான தொகுப்பாக கொண்டுவந்திருக்கிறன். இன்னொன்று நான் உண்மையிலேயே ஈழத்துப் படைப்பாளிகள் குறிப்பாக பெண்களும் அதை ஒத்துக்கொள்ளுவாங்கள் என்று நினைக்கிறன். எல்லா இடங்களிலும் இருந்து வரக்கூடிய படைப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கம்மி.. இன்னொன்று தினசரி வாழ்க்கையைப் போரிலும், இன்னொரு பக்கம் அன்றாட உழல்வில இருக்கக் சூழலில, ஆறஅமர இருந்து புத்தகங்களை தொத்து வெளியிடுவதற்கான மனம் பல பேருக்கு இருக்கு என்று தெரியும். இந்தப் படைப்பாளிகளிலேயே பல பேருக்கு இருக்கு. ஆனா எவ்வளவு தூரம் செய்யமுடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. இது வந்து முதல் கல்லை எடுத்துப் போட்டிருக்கிறம். இதில் இருந்து இன்னும் பல படைப்புகள் வரும், வரவேண்டும் என்கிற ஆசை எனக்கிருக்கு. இந்தத் தொகுப்பிலும் நிறையப் பயங்கள் இருக்கு. இதை எழுதினவர் ஆணா, பெண்ணா? என்பதும் சரியாகத் தெரியல. பெயரை வைத்துக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் சில சிக்கல்கள் இருக்கு. நிச்சயமாக இத் தொகுப்பில பிரச்சனைகள் இருக்கு என்று தான் நான் சொல்லுவன்.


9. இவ்வாறன உங்கள் முயற்சியை, வியாபார நோக்கம் தான் முதன்மையாக இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

கண்டிப்பாக இது வந்து உலகச் சந்தையை நோக்கிய ஒரு செயற்பாடுதான் அப்படித்தான் பல தொகுப்புகள் வெளிவருக்கின்றது. கூடிய வரைக்கு commercialலாக ஆக்கக் கூடாது என்ற எண்ணத்தோட பலபேருடைய contributionனில தான் இந்தத் தொகுப்பு வந்திருக்கு. இதை வெளியிட்டிருக்கிற ‘மாற்று’ டைய முதல் வெளியீடு இது. இதை வெளியிட்டவருக்கு பெரிய முதல் பலமோ, பொருளாதார பலமோ கிடையாது. ஆனால் புத்தகத்தைப் பையில தூக்கிக் கொண்டு போய் கண்காட்சி கண்காட்சியாக விற்றுவிட்டு வருகிற நபர் அவர். அப்போ பெரிய கோட்டை கட்டவில்லையானாலும் போட்ட காசை எடுக்கிற அளவிற்கு contribute பண்ணின நண்பர்களுக்கு திருப்பித் தருகிற அளவிற்காவது காசு எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. ஆனால் மிகப்பெரிய பைசா கிடைக்குமென்றோ, யாராவது முதல் கொடுத்தோ இது செய்யப்படவில்லை. அந்தக் காரணத்திற்காகவே எந்த ஈழம் தொடர்பான, எந்த அமைப்புகளிடமோ, தனிநபர்களிடமோ பொருளாதார உதவி பெறுவதில் எனக்கு மனசு சரிப்பட்டு வரவில்லை. அதனால தான் கேட்கவும் இல்லை.

நன்றி: வைகறை