Monday, February 27, 2006

கத்தரிக்காய் குழம்பு!

இன்று நான்கு நாட்களுக்கு முன்பு சமைத்த கத்தரிக்காய்க் குழம்பும் அதே நாள் அவித்த அரிசிமா பிட்டும் சாப்பிட நேர்ந்தது! என்ன ஆச்சரியமாக புருவங்களை உயர்த்திப் பார்க்கிறீங்களா? உண்மைதான் எனது குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த உணவு தான் அவை. இவற்றைச் சாப்பிடும் போது சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது அது தான் இங்கே எழுதவும் தூண்டினது. நானும் எனது நண்பரும் கனடாவில் உள்ள ஒரு வெதுப்பகத்திற்கு (பேக்கரி) வேலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த நாட்களில், காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது என்பது வார்த்தைகளால் எம்மைப்பொறுத்தவரை சொல்வது கடினம். கடும் பனிக் குளிர் காலங்களில் போர்வையால் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுக்குமால் போல் ஒரு அருமையான சந்தோஷசம்! அப்பாடா அதை அனுபவிச்சுப் பார்த்தா மட்மே அதன் முழுப் பரிமாணமும் புரியும். அந்த வெதுப்பகத்தில இந்தியப் பெண்கள், இலங்கைப் பெண்கள்(அக்காமார், தங்கச்சிமார்) அம்மாக்கள் எனப் பலரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். இந்த வெதுப்பகத்தில் மதிய உணவிற்காக எல்லோரையும் ஒரே நேரத்தில் போக விடமாட்டார்கள். இப்படியான சமயத்தில் நானும் நண்பரும் ஒருசேர போகவேண்டி வந்துவிட்டது. நண்பர் கொண்டு வரும் சாப்பாட்டில் தான் நான் பங்குபோடுவது வழமை. எனக்குச் சமைக்க சரியான சோம்பல். அதற்காக நண்பர் சமைக்கிறார் என்று நினையாதேங்கோ, அவருடைய துணையோடு சேர்ந்துதான் சமைக்கிறவர். சாப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இரண்டுபேரும் சாப்பிடத் தொடங்கிய போது எமக்கு அருகில் உள்ள இன்னொரு மேசையில் சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு தமிழ் அம்மாவோட பேச்சைக் கொடுத்தேன். ""எப்படி அம்மா? சாப்பிட வந்திருக்கிறீங்களா?""சாப்பிட மட்டும் வாய் திறக்க இருந்த அந்த அம்மாளு சாப்பிட்டாவோ இல்லையோ, நாங்கள் சாப்பிட்டு முடித்து எழும்ப மட்டும் தன்னுடைய வாயை மூடினமாதிரித் தெரியவில்லை.'என்னடா ராசாக்கள் இரண்டு பேரும் ஒரு பாசலில சாப்பிடுகிறீங்க? உங்களுக்கு இது காணாது பிள்ளையள், உங்கட வயசிற்கு எப்படிச் சாப்பிடவேண்டும் கண்டியலே" இந்தாங்கோ எனக்கு கூடிப்போச்சு. என்று சொல்லி மனுசி தன்னிடம் இருந்த கத்திரிக்காய்க் குழம்பில அரைவாசியையும், தேங்காய்ப் ப+ கலக்காத அரிசிமாப் பிட்டுவையும் எங்களுக்கு பரிமாறினா.எங்களுக்கு அவவிட்ட இருந்து சாப்பாட்டை வேண்டிச் சாப்பிட கஷ்;டமாக இருந்தது. ஏனென்றால் இந்த வயசில விடியற்காலையில எழும்பி சமைத்து நியாயமான தூரத்தில இருந்து வேலைக்கு வாறா, அவவிட்ட சாப்பாட்டைப் பங்கு போடுவதற்கு மனசு கேக்கவில்லை. மனுசி விட்டுதா எங்களை 'என்னடா தம்பிமாரே பார்த்துக்கொண்டு இருக்கிறீயள் சாப்பிடுங்கோ.. சாப்பிடுங்கோ என்று அடம்பிடிக்க நாங்களும் சாப்பிடத்தொடங்கினம். கொஞ்ச நேரம் கழிந்த பின்னர் "எப்படி இருக்கு என்னுடைய கத்தரிக்காக் குழம்பு? என்று வினவத்தொடங்கினா. நானும் மனுசி சந்தோஷப்படவேண்டும் என்பதற்காக நல்லா இருக்கம்மா, எப்படிச் சமைத்தனீங்க? என்று அவவின்ர தலையில ஐஸ் வைத்தபோது எனக்குப்பக்கத்தில இருந்தவன் தன்னுடைய சப்பாத்துக் காலால எனது கால் விரலை இறுக்கி மிதிக்கத் தொடங்கினான். அம்மா தொடங்கினா, ""ராசாக்கள் சாப்பிடும்போதே நான் நினைச்சனான் நல்ல ருசியா அனுபவிச்சுச் சாப்பிடுதுகள் யாரு பெத்த பிள்ளைகளோ இவ்வளவு ஆசையோட என்ர கறியச் சாப்பிடுதுகள் என்று."" ""முதலில கத்தரிக்காயை கீலம் கீலமா வெட்டிப்போட்டு நல்லா எண்ணையில பொரிக்க வேண்டும். பிறகு அந்த எண்ணைய புறப்பாக வடித்துப்போட்டு கறியைக் கூட்டி ஒரு அளவான சூட்டில சமைக்க வேண்டும். ஒரு நாளும் தம்பி தேங்காய்ப் பால் விடவே கூடாது. ஏனென்று இப்ப சொல்லுறன்.""'தேங்காய்ப்பால் விட்டால் கறி கெதியாகப் பழுதடைந்து போய்விடும்.' ""ஏன் அம்மா காலையில சமைத்து இப்ப சாப்பிடுவற்கிடையில தேங்காய்ப்பால் அவ்வளவு மோசமானதே? ......... அந்த அம்மா சிரிச்சுப்போட்டுச் சொன்னா ஒரு பதில்.............!!!!!!!!!இந்தக் கறி மூன்று கிழமைகளுக்கு முதல் சமைத்தது இப்ப மட்டும் எப்படி இருக்கு பார்த்தியலே...!!!நண்பருக்கு சாப்பிட்ட சாப்பாடு முழுவதும் தொண்டைக்கு மேலே வந்து நிற்பது போன்ற பிரமையோடு என்னை முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கும் அவன் மனுசிக்கு முன்னால் வாந்தி எடுத்திடுவானோ என்ற சந்தேகம்... நாள்பட நாள்பட சுவைதானம்மா..........என்று பாடவேணும் போல இருந்தது.

No comments: