Sunday, March 22, 2009

புலம்பெயர் தமிழரும் புலிக்கொடியும்?

கடந்த வாரம் கனடாவின், தொரொண்டோ நகரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக, அப்பிரதேசத்தில் அகப்பட்டு தவிக்கும் மக்கள் இராணுவ ஷெல் வீச்சுகளாலும், விமானக் குண்டு வீச்சுகளாலும் நாளாந்தம் கொல்லப்பட்டும், காயப்பட்டும் வரும் இன்றைய சூழ்நிலையில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் தமிழ் கனேடியர்களால் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆங்கில ஊடகங்களுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருந்த போதும், பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.
போர் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளையும், உயிரைப் பறிகொடுத்த சொந்தங்களையும் நினைத்து கணிசமானவர்கள் கலந்துகொண்ட போதிலும், கனடாவில் தற்போது 'மார்ச் பிரேக்' என்னும் பாடசாலைகளின் ஒரு வாரவிடுமுறை காரணமாக மாணவர்களும் அதிகமாக கலந்துகொண்டார்கள். ஏனையோர்கள் வழமையான எந்தக்காரணமும் இல்லாமல், அல்லது எதற்காக இம்மாதிரியான ஊர்வலங்களில் கலந்து கொள்ளுகிறோம் என்ற சிந்தனை அற்றவரகளாக கலந்துகொண்டவர்களும் இதில் அடங்குவர்.

தமீழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினைக் கொண்ட கொடிகளையும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்தினையும் இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் எடுத்துச் சென்றார்கள். பொதுவாக இம்மாதிரியான ஊர்வலங்கள் தமிழர்களால் நடத்தப்படும்போது இப்படங்களையும், கொடிகளையும் எடுத்துச் செல்வது இங்கு வழக்கம்.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பினை கனடாவில் தடைசெய்த பின்னர் இம்முறை அதிகாமாக பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளை கனடா அரசாங்கம் மட்டும் தடைசெய்ய வில்லை. உலகின் பல நாடுகள் இவ்வமைப்பை தடைசெய்துள்ளது என்பது யாவரும் தெரிந்த உண்மை.

சிறுவர்களை தமது படையில் சேர்ப்பது, மனிதக் குண்டுகளைப் பயன்படுத்துவது, பொது இடங்களில் அழிவுகளை ஏற்படுத்தவது, ஏனைய தமிழ் குழுக்களை தடைசெய்தது, ஏக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துவது, மாற்றுக் கருத்து அரசியலாளர்களை கொலை செய்வது, புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் பலவந்தமாக பணம் வசூலிப்பது போன்ற இன்னபல காரணங்களால் கனடா, அமெரிக்கா உட்பட ஏனைய பல ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ளார்கள்.

இது இவ்விதம் இருக்க அண்மைக்கால யுத்தத்தின்போது, யுத்தத்தின் கொடூரத்தைத் தாங்க முடியாத மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லும்போது, அம்மக்களை நோக்கி புலிகள் துப்பாக்கி பிரயோரகம் செய்யதார்கள் என்றும், அதில் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஐ.நா. அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்தானது புலிகள் மீது மேலும் வெறுப்படையவே செய்கின்றது. இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாத புலிகள், அங்கிருந்து தப்பிச் செல்லும் மக்களை சுட்டுக்கொல்லுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

இம்மாதிரியான சூழலில், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்தின் மீதான தமது எதிர்ப்பினைக் காட்டுவதற்காக ஒன்று கூடும் போது, விடுதலைப்புலிகளின் கொடிகளையும், அவர்களின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படங்களையும் தாங்கிக்கொண்டு 'எமது தலைவர் பிரபாகரன்' என்று சத்தம் போடுவதால் சிக்கலாக இருக்கும் எமது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே இவைகள் வழிசமைக்கும். '
- ரமேஷ் -

Sunday, July 01, 2007

எடுபடாத பல குரல்களின் வெளி!


அ.மங்கை என்று அழைக்கப்படும் பத்மா வெங்கட்ரமணன், சென்னை ஸ்ரெல்லா மெரீஸ் கல்லூரியின் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். கடந்த இருபது ஆண்டுகளாக நாடகத்துறையில் நாட்டத்துடன் ஈடுபட்டுவரும் இவர், பாடசாலை மாணவர்களுக்கும், சமூகசேவை நிலையங் களுக்கும் சென்று நாடகப்பட்டறைகளை நாடாத்தி வருவதோடு, பல நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார். தொரான்டோவில் இடம்பெற்ற 2வது தமிழ் இயல் மகாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் நாட்டில் அரங்கக்கலைகள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தார். அத்தோடு கனேடிய நாடகக் கலைஞர்களுக்காக நாடகப்பட்டறையை நாடத்தினார். இவரின் உடல் எண்ணிக்கை என்ற நாடகத்தை நாடக விரும்பிகளுக் காக நடாத்தியும் காட்டினார். அண்மையில் ஈழப் பெண்கவிஞர்களின் கவிதை களை ‘பெயல் மணக்கும் பொழுது’ என்று தொகுத்து வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் தொரண்டோ வந்திருந்தபோது ‘வைகறை’ க்கு வழங்கிய நேர்காணல்.

1. உங்களின் அரங்க / வீதி நிகழ்வுகள் பற்றியும், இ;த் துறையை நீங்கள் தெரிவு செய்ததின் நோக்கம் பற்றியும் சுருங்கமாக சொல்லுங்கள்?

அரங்கத்தில, நாடகத்தில எல்லாம் தெரியும் என்ற முனைப்போட நிச்சயமா நான் வரல்ல. முதல்ல நான் வந்தது குறிப்பா பெண்கள் அமைப்பு சார்ந்த, ஒட்டடுமொத்தமா இடதுசாரி அரசியல சார்ந்த அமைப்புகளோட சேர்ந்து வேலை செய்வதற்கான ஒரு முனைப்புக் கிடைச்சது. இப்ப அதுக்குள்ள இருந்து வேலை செய்யும் போது, கூட்டம் போடுறதோ அல்லது பேசிக்கொண்டே இருப்பது அது ரொம்ப One way trafic ஆக இருந்தது எனக்கு. இன்னொன்று ஒரு சில விசயங்கள மனசில பதியிறமாதிரி சொல்லுறதிற்கு இந்த மாதிரி கலை நிகழ்ச்சிகள் ஒரு வலுவான சாதனமாக பட்டிச்சு. முதல்ல பாடல்களாகச் செய்தோம். அப்புறம் கொஞ்சம் அந்த மாதிரி. 80களில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா அளவிலேயே ஒரு அரசியல் சார்ந்த, வீதி நாடகங்கள் சார்ந்த ஒரு Activisms என்கிறது ரொம்ப நல்ல…. குறிப்பாக south Indiaவில Emergency க்கு அப்புறமே தொடங்கிச்சு. எனவே தணிக்கைகளை மீறி செயல்படுவதற்கு பெரிய வசதிவாய்ப்புகள், பிரச்சாரங்கள், விளம்பரங்கள், செலவுகள் இதெல்லாம் இல்லாமல் செய்வதற்கான ஒரு வடிவம் என்று பார்த்தா, மனித உடம், மனிதக் குரல், மனிதனுடைய உணர்வு, மனம், அதுசார்ந்த விசயங்கள் ரொம்ப வேகமாக இருந்தது. அப்ப 80களில நாங்களும் அதற்குள்ள போனம். அப்ப அரசியல் வேலைகளுக்கான ஒரு பகுதியாகத்தான் என்னுடைய அரங்க நிகழ்வுகள் தொடங்கிச்சு என்று நான் நினைக்கிறன்.


2. இன்றைய சூழலில் நவீன தொடர்பு சாதன ஊடகங்கள் இருக்கும் போது மேடை நாடகம், வீதி நாடகங்கள் ஊடாக எவ்வளவு தூரம் உங்கள் கருத்துக்கள் பரவலாக மக்களைச் சென்றடையும் என்ற சந்தேகம் பற்றி….?

எண்ணிக்கை அளவில வைச்சுப் பார்த்தீங்கென்னா தொலைக்காட்சி அளவிற்கு சினிமான கூடப்போகமுடியாது. அதான் நிஜம். (டி.வி.டியில பார்க்கிறது வேற) ஆனா ஒரு அனுபவம் என்று பார்க்கும் போது.. அரங்கம் கொடுக்கக் கூடிய அனுபவம் அந்த நேரடியாக அதாவது வேர்கிறது என்றால் அந்த வேர்வையை பார்க்கிற ஒரு வாய்ப்பு. பெருமூச்சு விட்டதென்றா மார்புகள் ஏறி இறங்கிறத பார்கிக்றது. அதாவது நேரடியாக தன்னை மாதிரி இரத்தமும் சதையுமான ஒரு நபர் இந்த உணர்வுகளை வெளிக்காட்டுகிறார் என்கிற அனுபவத்தை தருவது நாடகம் மட்டும் தான். Even நடனத்தில் எல்லாம் அது கொஞ்சம் stylish ஆகிறது. நாடகத்தில நம்ம ஒயிலாக்க வடிவத்தில செய்தாக்கூட அது வந்து ஒரு சக மனிதனின் நேரடியாக கண்னாலும், காதினாலும், மனதாலும் உணரக்கூடிய ஒரு அனுபவத்தைத் தருவது அரங்கம் என்று சொல்லலாம். என்னைப் பொறுத்த வரை அந்த Medium த்தை யாரும் Over come பண்ண முடியாது. அரங்கத்தை எதுவுமே Replace பண்ண முடியாது. அதனுடைய சில அம்சங்களை வேற வேற சாதனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. நீங்கள் சார்ந்த அல்லது நம்பும் அரசியல் ஊடாக சமூகத்தில் ஒதுக்கப்படும் / ஒடுக்கப்படும் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

அரசியல் சார்ந்த, அறிவு சார்ந்த, கோட்பாடு சார்ந்த புரிதல் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஏழை சொல் அப்பலம் ஏறாது என்கிற மாதிரி மேடையில் எடுபடாத பல குரல்களை வெளியில கொண்டு வருவதற்கு அரங்கக்தை ஒரு பெரிய ஊடகமாக பயன்படுத்துவதில எனக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு. அதில பிரதானமான குழுவாக எனக்கு கண்ணில படுகிறது பெண்கள். இப்போ பெண்களின் குரல் என்பதோ அல்லது பெண்களின் இருப்பு என்பதோ இங்கே இருக்கக் கூடிய தந்தைமை ஆதிக்க சமூதாயத்தினுடைய கட்டமைப்பில தான் உருவாகிறது. அப்ப ஒரு பெண் எப்படி நடக்கணும் என்கிறதக்கூட அவங்க தீர்மானிக்கிறாங்க அதே மாதிரி நாங்கள் நடக்கிறம். நிஜமா நாங்கள அந்த மாதிரி நடகிறமா என்கிறது பெண்ணாக இருக்கிறவ யோசித்துக் கூட பார்கிறதில்லை. இப்படி இருந்தால் தான் நீ பெண்ணா அங்கீகரிக்கப்படுவாய் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆணுக்கும் அதே சிக்கல்கள் இருக்கின்றது. ஆண் என்றால் இப்படித்தான் நடந்து கொள்னும். ஆண் என்றால் அழக் கூடாது. “Boys don’t cry” என்ற படம் எல்லாம் வந்ததில்ல அப்ப அந்த பாலினம் சார்ந்த புரிதலோட கூடிய ஒரு Voice நாம அரங்கத்தில பழகவேடியதாக இருக்கிறது. அதே மாதிரி இப்ப வந்து சாதி ரீதியாக ஒடுக்குமுறை இருக்கிறது. தமிழ் நாட்டு அரங்கத்தைப் பொறுத்த வரை ‘தப்பாட்டம்’ என்ற ஒரு உடைப்பைக் கொண்டு வந்திருக்கிறது என்று கூடச் சொல்லலாம். அது ஒரு சாதியம் சார்ந்த ஒரு கலையாக இருக்கு. இழிவைக் குறிக்கிறதாக இருக்கு, சாவோடு ஒட்டியிருக்கிற சடங்கு சார்ந்ததாக இருக்கிறது. ஆண்களால் மட்டுமே ஆடப்படுகிறது. இப்படியெல்லாம் பல தடங்கல்கள் இருந்தாலும் கூட அது ஒரு போர்ப்பறையாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அது என்னுடைய இசை. அந்த இசையை நாம இழக்கக் கூடாது அப்படி என்கிறமாதிரி. அப்படித்தான் அரவாணிகளுடைய சிக்கல்களையும் நான் பார்க்கிறேன். ஒரு ஆணாக இல்லாமல், பெண்ணா இல்லாமல், இரண்டாகவும் இருக்கக் கூடிய அல்லது இரண்டும் கெட்டானாக இருக்கக் கூடிய ஒரு வாழ்க்கை வாழக்கூடிய அவங்களுடைய குரல்.
அப்போ விழிம்பில அல்லது ஒதுக்கப்பட்டோராக, அம்பலம் ஏறாத சொற்களில இருக்கிறவங்களுக்கு மேடை வந்து ஒரு வாய்பாக அமையும் என்று நான் நினைக்கிறன்.


4. உங்களுடைய அரங்கக் குழுவில் ஆண் / பெண் கலைஞர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். அவர்களும் அரசியல், கருத்து ரீதியான இணைந்து கொண்டவர்களா? எப்படி?

முதல்ல அமைப்பு சார்ந்து செய்யும்போது அமைப்பில இருக்கக் கூடிய உறுப்பினர்களைக் கொண்டு தான் நாம கலைக்குழுவில உறுப்பினர்களாக எடுக்கிறம். ஒரு கொள்கை ரீதியாகவோ அல்லது தலித்துகளுக்கு சார்பானதாகவோ அரசியல் தன்மை உடையவர்கள் குழுவிற்குள்ள வர்ராங்க என்று நாம ஊகிக்கின்றோம். ஆனா உண்மையில் நீங்கள் நாடகத்தில ஒத்திகையில, நாடகம் செய்யும்போது நமக்குக் கிடைக்கிற அனுபவத்தில இருந்து தான் நமக்கு அவங்கவங்கட சுயநிறம் தெரியும். அதனால எனக்கு உண்மையில இந்த அரசியல் உனக்கு இருக்கா இல்லையா என்றெல்லாம் தராசு போட்டு பார்க்கிறதில எனக்கு நம்பிக்கையில்ல. குறிப்பா புநனெநச வந்து நான் இன்னைக்கு Feminists என்று சொல்லி இன்னைக்கு இருக்கிற மாதிரி ஐம்பது வருசத்திற்கு இருப்பன் என்று சொல்லி எதிர்பார்க்கவும் முடியாது. அந்த Concept மாறிக்கிட்டே இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிக்கலை மையப்படுத்தி நாடகம் செய்வதென்றா அதில் பங்கெடுக்கின்ற கலைஞர்களுக்கு அந்த Issues பற்றின ஒரு Broad ஆன Agreement இருக்கனும் என்று நான் நினைக்கிறன். இப்ப ஒரு சுற்றச் சூழழுக்கு எதிரான ஒரு ஆள் ‘குறிஞ்சிப்பாட்டு’ போன்ற ஒரு நாடகத்தைச் செய்ய வந்தால் எனக்கு அதில சிக்கல் வரும். அல்லது ஒரு பெண்ணுடைய எழுத்த மட்டமாக நினைக்கிற ஆள் ‘ஒளவை’ நாடகத்தில வந்து செய்தால்… செய்யவும் முடியாது என்று நான் நினைக்கிறன். நிஜமாகவே நம்புறன் மேடையில பொய் சொல்ல முடியாது. உண்மையில மேடையில நடிக்கிறது என்கிறது வந்து நம்மள அம்மணமா காட்டுறதுதான். உன்னுடைய எல்லா உணர்வுகளையும் அப்பட்டமா வெளியில சொல்லுவதற்கான ஒரு இடமாத்தான் அது இருக்கிறது. அங்க ரொம்ப மறைச்சு பஞ்சோந்தியாக இருக்க முடியாது என்று தான் நினைக்கிறன். அதனால கண்டிப்பாக அந்த அரசியல் சார்ந்த அறிவு என்பது நான் எடுத்து கொள்கிற Textக்கும் அது சார்ந்த அரசியல் புரிதல் என்பதும் அவசியம். இப்ப அரவாணி பற்றிச் செய்யும் போது எனக்கொண்ணும் தெரியாது. அதைக் கற்றுக்கொள்ளாமல் நான் அதை செய்யக் கூடாது என்று நான் நினைக்கிறன்.


5. பெண் சிசுக் கொலைக் எதிராகவும், அரவாணிகளின் உரிமைக்காவும் நீங்கள் வேலை செய்கின்றீர்கள். தமிழச் சூழலில் அரவாணிகளை எப்படிப்பார்கிறார்கள்? அல்லது நடத்துகிறார்கள்?

தமிழ்ச் சமூகத்தினுடைய வெளிப்பாட்டிற்கு உரைக்கல்லாக நாம மீடியாவையும், திரைப்படத்தையும் எடுத்துக்கிட்டமென்றால் அதவிட அதிகமான இவங்களை கேவலப்படுத்திறது வேற எதுவும் இல்லை. அதுதான் Majority வான point of view வாக இருக்கிறது. தெருவில அவங்க நடக்க முடியாது, சேர்ந்து படிக்கிறவங்களால வாற தொல்லைகள் கொஞ்சம் கூட. அதெல்லாம் உண்மையில சொல்லிமாளாது. பல நேரங்களில பாலியல் வன்முறை உட்பட எல்லா விசயங்களையும் அனுபவிக்கிறவங்களாகத் தான் அந்த அரவாணிகள் இருக்கிறாங்க. ஆனா இப்ப வந்து எயிட்ஸ் தொடர்பான விழிப்பு உணர்வு காரணமாக என்னவோ இவங்களையும் ஒரு ஜீவிகளாக அங்கிகரிக்கின்ற நிர்ப்பந்தம் வந்திருக்கு. அப்ப இவங்களுக்கு ஒரு Presents இருக்கு என்பதை இன்றைக்கு தமிழ்ழ வந்து ஒத்துக்கிட்டாங்க என்று தான் நான் நினைக்கிறன். இருந்தாலும் அதை அங்கீகரித்திட்டாங்க என்று சொல்ல முடியாது.


6. அண்மைக்காலமாக பெண் மொழியின் தேவை பற்றி பரவலாக பேசப்படுகிறது. அதன் தேவை, முக்கியத்துவம் பற்றி உங்கள் கருத்து என்ன?

உண்மையில் பெண்மொழி பற்றிய விவாதம் வந்து theoretical லாக பெண்கள் தொடர்பான விசயம். அது அல்ல. இது வந்து மொழிக்குள்ள இயங்கக் கூடிய ஒரு படுமோசமான பாலியல் பாராபட்சத்திற்கு எதிராக ஆண்களும், பெண்களும் தொடுக்க வேண்டிய ஒரு யுத்தம். உண்மையிலலேய ஒரு பெரிய யுத்தம். கொச்சையாக பெண்ணைப்பார்க்கிற பார்வையில் இருந்து சுயமதிப்பு சார்ந்த சிந்தனைகள் இல்லாம ஒரு பண்டமாக பெண்ணை வர்ணிக்கிறதில இருக்கு. பெண்ணைப்பற்றிய சிந்தனையில் இருக்கு. அது ஆண், பெண் இரண்டு தரப்பிலும் இருந்து வருகுது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக பெண்கள் அனுபவம் சார்ந்தும், தங்களுடைய உயிரில் சார்ந்த அனுபவங்கள் மூலமாகவும் தன்னுடைய மொழியைப் பற்றி பிரக்ஞையோட அவங்க பயன்படுத்தினாங்கென்டா புதிசான ஒரு மொழிய, ஒரு யாப்ப நம்மளால கண்டு பிடிக்க முடியும் என்ற ஊகத்தில தான் நாம செயல்படுறம். ஆனா இதில வந்து பெண்ணாப் பிறந்தவங்கதான் செய்ய முடியும் என்பதோ அல்லது பெண்ணாப் பிறந்த எல்லாரும் செய்யமுடியும் என்கிறதோ எனக்கு ஒப்புதலே கிடையாது. ஏனென்றா அவ்வளவு தூரம் ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட ஆணாதிக்க சமூகத்தில நாம எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறம். ஆதனால பெண்மொழி குறித்த உரையாடல் என்பது ரொம்ப ஆரோக்கியமாக இரண்டு தரப்பிலும் வைக்கப்பட வேண்டிய ஒன்று. புதிதான ஒரு மொழி என்பது கட்டாயம் தேவை என்று நான் நினைக்கிறன். மொழியுடைய ஆதிக்கம் சார்ந்த கட்டமைப்பை உடைச்சிட்டு வரக்கூடிய ஒரு புதிய மொழி நம்ம எல்லாருக்கும் வேண்டும் என்று நான் நினைக்கிறன்.


7. தமிழ் மரபும், பண்பாடும் ஆண் / பெண் சமத்துவத்திற்கு தடையாக இருக்கின்றனவா? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

இந்த மரபு, பண்பாடு என்பது எதை தமிழ் மரபு, பண்பாடு என்று குறிக்கிறதில இருந்து வந்திருக்கும். இப்ப வந்து தமிழ் பெண், கற்பு உண்மையிலே அதுக்கு என்ன பொருள் என்றே எனக்கு தெரியல. இப்போ தமிழ் கற்பு என்று சொன்னா தமிழுக்கென்று தனியா சாயம் puசப்பட்ட ஒரு கற்பு இருக்கா என்று எனக்குத் தெரியல. இப்ப குஷ்புவினுடைய வழக்கு வந்த போதெல்லாம் ரொம்ப கொடுமையாக ஏதோ தமிழருடைய கற்புணர்வை அவ குத்திட்டாங்க என்கிற மாதிரி பெரிய போராட்டங்கள் எல்லாம் அவங்களுடைய Statementக்கு எதிராக வந்திச்சு. அப்ப அதெல்லாம் எனக்கு ஒரு பங்கர கற்பிதமாக தெரியுது. இது பெண்ணை முடக்கி வைப்பதற்கான கற்பிதமாக இருக்கு. அனால் இதற்கு காரணம் தமிழ் மரபில்ல. மாறாக பிற்போக்கான பார்வை சார்ந்த விசயமாக தான் நான் பார்க்கிறன்.உண்மையில ஒளவையைப் படிச்சவங்க, அந்தக் காலத்திலேயே காதல் உணர்வையும், காம வேட்கையையும் ரொம்ப இயல்பாகவும், எந்தவித கூச்சநாச்சமும் இல்லாமல் பேசின குரல் ஒளவையினுடைய குரல். அல்லது ஒரு பெண்ணுக்கு வந்து கனிகை வாழ்வும் வேண்டாம், இல்வாழ்வும் வேண்டாம் துறவு வாழ்க்கையே வேண்டும் என்று சொன்ன பிம்பம் மணிமேகலை. இதெல்லாம் நமக்கு தமிழிலதான் கிடைக்கிது. அப்ப இப்படி இருக்கும்போது எந்த மரவை நீங்கள் தமிழ் மரபு என்று சொல்லுறீங்க என்ற கேள்வி எனக்கு இருக்கு. இன்னொன்று மரபோ, பண்பாடோ என்று சொலுறதெல்லாம் வந்து ஒரு பெட்டிக்குள்ள போட்டு யாரோ ஒருத்தர் தீர்மானிக்கிற ஒரு சட்டகத்திற்குள்ள அடையவே அடையாது. அது Dynamic. ஒவ்வொரு நேரமும் மாறுபடும். உண்மையிலேயே ஒரு இயங்கியல் ரீதியான புரிதல் இருக்கிறவங்க இந்தக் கட்டத்தில இருந்து இன்னொரு கட்டத்திற்கு போகனுமே தவிர பின்னாடி திருப்பி எடுக்கிறத்திற்கான முயற்சியை அனுமதிக்கவே முடியாது என்று நான் நினைக்கிறன். எனக்கு நியமாகவே தமிழ் பெண் என்பதற்கு விளக்கம் தெரியல. தமிழ் பேசுகிற பெண் என்றால் எனக்கு விளங்குது. நான் தமிழ் மொழி சார்ந்த குடும்பத்தில பிறந்திருக்கிறன், தமிழ் நாட்டில நிற்கிறன். அதனால எனக்குத் தமிழ் தெரியுது. ஆனால் தமிழ் பெண் அப்படி என்று தனியான அங்க இலட்சணங்கள் எல்லாம் இருக்கா என்று எனக்குத் தெரியல. அதுக்கு பின்னாடி நீங்கள் அடக்கஒடுக்கம், அதிர்ந்து பேசாம இருக்கிறது, புருசனுடைய காலத்தொட்டுக் கும்பிடுகிற பண்பாடு எல்லாம் என்றைக்குமே நம்முடைய பண்பாடாக என்றைக்குமே இருந்ததில்லை. பார்க்கப்போனல் பங்கரமான பார்ப்பனியம் சார்ந்த ஒரு பண்பாடு. கணவன் இறந்தவுடன் மனைவியைப்போட்டு சிதையில கொழுத்தனம் என்று சொல்லுறது பார்ப்பனர்களுடைய வழக்கம். இதை வந்து தமிழர்களுடைய மரபு, பண்பாடு சார்ந்து கொண்டு வரவேண்டும் என்பது எனக்கு நிஜமாகவே விளங்கவில்லை.


8. அண்மையில் ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகளை “பெயல் மணக்கும் பொழுது” என்று தொகுத்து வெளியிட்டிருக்கிறீங்க. அதன் நோக்கம் பற்றி சொல்ல முடியுமா?

பொதுவாக பெண் படைப்பாளர்கள் தொடர்பான ஒரு உரையாடல் வலுவாக வந்துகொண்டிருக்கிற காலம் இது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில பெண் கவிஞர்களுடைய வெளிப்பாடுகள் பற்றி நிறைய சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கு. அப்ப அண்டையில இருக்கக் கூடிய நாடான ஈழத்தில் இருந்து எழுதக்கூடிய பெண்களுடைய கவிதைகள். உண்மையிலேயே இதில நான் தொகுத்திருப்பது 86க்கு பின்னரான அதாவது “சொல்லாத சேதி” தொகுப்பிற்கு பின்னர் வந்தவைகள். அந்த வகையில் மிகவும் நெருக்கடி வாய்ந்த சூழலில இன்றைக்கு உலகெங்கிலும் பரவியிருக்கக் கூடிய ஒரு சமூதாயமாக, வீடையும், நாட்டையும் தொலைத்த ஒரு சமூதாயமாக இருந்து கொண்டிருக்கிற ஈழத்தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடைய வெளிப்பாடக இவை இருக்கின்றன. அப்ப கிட்டத்தட்ட வாழ்வா, சாவா என போராட்டம் நடந்துகொண்டிருக்கிற நேரத்தில கவிதை எழுதனும் என்கிற முனைப்பு இவங்களுக்கு வருவது என்பதும், அந்தக் கவிதையே அவங்களுடைய வெளிப்பாட்டிற்கான ஊடகமாக இருக்கிறது என்பதும் உண்மையிலேயே எனக்கு வியப்பைத் தருகிறமாதிரி இருக்கின்றது. அதே சமயம் எரிகிற வீட்டுல பிடுங்கினது இலாபம் என்கிறமாதிரி இப்ப வந்து உலகெங்கிலும் பரவியிருக்கிற காரணத்தினால ஈழ என்கிற அடைமொழியைச் சேர்த்தா எதை வேண்டுமானாலும் விற்று விடலாம் என்ற நிலைமையும் வந்துகிட்டிருக்கு. இப்ப தமிழகத்திலேயே நிறைய தொகுப்புகளும், எழுத்துகளும், நிறைய விசயங்களும் நடந்துகிட்டிருக்கிறது எனக்கு விளங்குகிறது. அதனால் தான் இதைத் தொகுக்கும் போது பெரிய பதிப்பகம் சார்ந்து போகாமல், ஒரு சிறு பதிப்பகமாக இந்தப் பெண்களுடைய எழுத்து அல்லது படைப்புலகத்தை ஒரு பெண்ணியம் சார்ந்த சிந்தனையோட பொருத்திப்பார்க்கக் கூடிய ஒரு Discourse குள்ள வரணும் என்றுதான் நான் இந்தமாதிரியான தொகுப்பாக கொண்டுவந்திருக்கிறன். இன்னொன்று நான் உண்மையிலேயே ஈழத்துப் படைப்பாளிகள் குறிப்பாக பெண்களும் அதை ஒத்துக்கொள்ளுவாங்கள் என்று நினைக்கிறன். எல்லா இடங்களிலும் இருந்து வரக்கூடிய படைப்புகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கம்மி.. இன்னொன்று தினசரி வாழ்க்கையைப் போரிலும், இன்னொரு பக்கம் அன்றாட உழல்வில இருக்கக் சூழலில, ஆறஅமர இருந்து புத்தகங்களை தொத்து வெளியிடுவதற்கான மனம் பல பேருக்கு இருக்கு என்று தெரியும். இந்தப் படைப்பாளிகளிலேயே பல பேருக்கு இருக்கு. ஆனா எவ்வளவு தூரம் செய்யமுடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. இது வந்து முதல் கல்லை எடுத்துப் போட்டிருக்கிறம். இதில் இருந்து இன்னும் பல படைப்புகள் வரும், வரவேண்டும் என்கிற ஆசை எனக்கிருக்கு. இந்தத் தொகுப்பிலும் நிறையப் பயங்கள் இருக்கு. இதை எழுதினவர் ஆணா, பெண்ணா? என்பதும் சரியாகத் தெரியல. பெயரை வைத்துக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியெல்லாம் சில சிக்கல்கள் இருக்கு. நிச்சயமாக இத் தொகுப்பில பிரச்சனைகள் இருக்கு என்று தான் நான் சொல்லுவன்.


9. இவ்வாறன உங்கள் முயற்சியை, வியாபார நோக்கம் தான் முதன்மையாக இருக்கிறது என்று சொல்லுபவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

கண்டிப்பாக இது வந்து உலகச் சந்தையை நோக்கிய ஒரு செயற்பாடுதான் அப்படித்தான் பல தொகுப்புகள் வெளிவருக்கின்றது. கூடிய வரைக்கு commercialலாக ஆக்கக் கூடாது என்ற எண்ணத்தோட பலபேருடைய contributionனில தான் இந்தத் தொகுப்பு வந்திருக்கு. இதை வெளியிட்டிருக்கிற ‘மாற்று’ டைய முதல் வெளியீடு இது. இதை வெளியிட்டவருக்கு பெரிய முதல் பலமோ, பொருளாதார பலமோ கிடையாது. ஆனால் புத்தகத்தைப் பையில தூக்கிக் கொண்டு போய் கண்காட்சி கண்காட்சியாக விற்றுவிட்டு வருகிற நபர் அவர். அப்போ பெரிய கோட்டை கட்டவில்லையானாலும் போட்ட காசை எடுக்கிற அளவிற்கு contribute பண்ணின நண்பர்களுக்கு திருப்பித் தருகிற அளவிற்காவது காசு எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. ஆனால் மிகப்பெரிய பைசா கிடைக்குமென்றோ, யாராவது முதல் கொடுத்தோ இது செய்யப்படவில்லை. அந்தக் காரணத்திற்காகவே எந்த ஈழம் தொடர்பான, எந்த அமைப்புகளிடமோ, தனிநபர்களிடமோ பொருளாதார உதவி பெறுவதில் எனக்கு மனசு சரிப்பட்டு வரவில்லை. அதனால தான் கேட்கவும் இல்லை.

நன்றி: வைகறை

Sunday, November 19, 2006

ரவிராஜின் கொலையும் கறை படிந்த எமது கரங்களும்!

கடந்த வாரம் இலங்கையின் யாழ் மாட்டவ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனம்தெரியாத நபரினால், தலைநகர் கொழும்பில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் தமிழ் மக்களிற்கு எதிராக நடாத்தபடும் வன்முறைகளுக்கெதிராக, அண்மைக்கலாமாக மிக அதிகமாக குரல் கொடுத்து வருபவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக ரவிராஜ் விளங்கினார்.

கொழும்பிலும் அதன் புறநகரங்களிலும் வாழ்ந்து வரும் தமிழர்களையும், தமிழ் வர்த்தகர்களையும் கடத்துதல், பணம் பறித்தல், கொலை செய்தல் போன்ற செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அவற்றுக் கெதிராக கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, சம்பந்தப்பட்வர்களுக்கு ஓரளவேணும் நெருக்கடிகளை கொடுப்பதற்கு ஏதுவாக இருந்தவர்களில் ரவிராஜூம் ஒருவர்.

கொழும்பில் பரவலாக இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்திற்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலங்களின் போது முன்நின்று பங்கேற்பதும், அரசபயங்கரவாதத்திற்கெதிராக கருத்துக்களையும், கோஷங்களையும் எழுப்பியது மட்டுமல்லாமல், சிங்கள வானொலிகளின் நேர்காணலின் போது அரசிற்கெதிராகவும், அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க்குழுக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை கடும் தொனியில் முன்வைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவிராஜ் கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தனியார் தொடர்புசாதமொன்று அவரை பேட்டி கண்டது. அதன் போது அவர் இலங்கை ஜனாதபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏ9 பாதை விவகாரம் தொடர்பாக சாவால் விடும் தொனியில் மேற்கண்டவாறு கருத்தினை தெரிவித்திருந்தார். ‘முடிந்தால் ஜனாதிபதி அம்பாந்தோட்டைக்கான தரைவழிப் பாதையை மூடிவிட்டு கடல்; மார்;க்கமாக அப்பகுதிக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கட்டும்’ என்று.

அதுமட்டுமல்லாமல் அவர் கொல்லப்படுவதற்கு முதல் நாள் கொழும்பில் இருக்கும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் காரியலயத்திற்கு முன்பாக, வாகரையில் நடந்த கொலைச் சம்பவத்திற்கு எதிராகவும் அங்கு பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு அனுப்பப்பட வேண்டியும், இலங்கை அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் ரவிராஜ்.
இச் சம்பவங்களின் பின்னணியிலேயே ரவிராஜின் கொலையைப் பார்க்கவேண்டியுள்ளது.

கொழும்பில் வெளிவரும் ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒன்றின் தகவலின் படி அம்பாறை மாவட்ட பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினருக்கும் இக்கொலைக்கும் தொடர்பிருப்பதாக இலங்கை புலனாய்வுத்துறையினை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை செய்தி வெளிட்டுள்ளது. ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவையும் ரவிராஜ் அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அரசியல் கொலைகள் இலங்கையில் மிக மலிந்து போய்யிருப்பது கண்கூடு. தனிமனிதன் தொடக்கம் குழுக்கள், அரசியல் கட்சிகள் என்று இலங்கையில் வாழும் எந்த சமூக அமைப்பாக இருந்தாலும், அவர்கள் தம்முடைய கருத்தினை வெளிப்டையாக தெரிவிக்கமுடியாத சூழ்நிலை இன்று எல்லா மட்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் இயக்கங்களாக இருந்தாலும் சரி, விடுதலைப்புலிகளின் ஜனநாக விரோத செயற்பாடுகளை எதிர்க்கும் ஏனைய குழுக்களாக இருந்தாலும் சரி கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளத் திராணியற்ற சமூகமாக ஒட்டுமொத்த இலங்கையர்களும் மாறிக்கொண்டு வருவது இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக ஐயத்தையே ஏற்படுத்துகின்றது.

இலங்கையின் தலைநகரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிராயுதபாணியான தமிழ் அரசியல் வாதியின் படுகொலையை உரத்து, எதிர்த்து குரல் கொடுக்க, உலக அரங்கிலே கொலை வெறியர்களை அம்பலப்படுத்த எந்தவொரு நேர்மையுள்ள தமிழனுக்கும் மனச்சாட்சி இடம் தாராது என்பது அப்பட்டமான உண்மை. கருத்து முரண்பாட்டினால் சக நண்பன் தொடக்கம் மாற்று இயக்க உறுப்பினர், தமிழ் தலைவர்கள், அரசியல் எதிரிகள் என்று சகோதப்படுகொலைக் கலாசாரத்தை திறம்படவே கட்டிக்காத்து, அதன்படி வழிநடத்தப்படும் எமது இளைஞர்களை எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எமது கரங்களும், குரல்வளைகளும் கறைபடிந்திருக்கும் போது எப்படி எம்மால் சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு முன்னால் குரல்களை உயர்த்த முடியும்? விடுதலையை நோக்கி நீள வேண்டிய எமது கரங்களின் இடுக்குகளுக்குள் மாற்றுக் கருத்து சகோதரப்போராளியின் குரல் வளை, ஏனைய தமிழ் தலைவர்களின் நெற்றியில் குறிவைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி, அப்பாவி முஸ்லீம் மக்களின் வாழ்வுரிமை….

இவ்வாறாக எம்மைச்சுற்றி அயோக்கியத்தனங்களை
கையகப்படுத்திக்கொண்டு, சர்வதேசமே எம்மை நோக்கிப்பார்! எம்மீது இழைக்கப்டும் அநீதியை இன்னுமா பார்த்துக்கொண்டிருக்கிறாய்! உனது நீதி எங்கே! நியாயம் எங்கே! என்று புலம்பெயர் நாடுகளில் புலம்பிக்கொண்டிருப்பதால் மட்டும் எம்மை ஓடோடி வந்து சர்வதேசம் காப்பாற்ற மாட்டாது. ஏனென்றால் எமது கறை படிந்த கரங்களை அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் தான் அவர்கள் எமது விடையத்தில் நடந்துகொள்வார்கள்.

எனவே எமது கறைபடிந்த கரங்ளை கழுவிக்கொள்ளவும், இனிமேலும் கறைபடியாமல் பார்த்துக்கொள்ளவும் முதலில் கற்றுக்கொள்ளுவோம்.

Saturday, September 16, 2006

சர்வதேச சமூகத்திற்காக ஒரு பேச்சுவார்த்தை

‘வைகறை’ பத்திரிகையின் ஆரியர் தலையங்கம்

ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை அக்டோபர் முற்பகுதியில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறும் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முன்நிபந்தனையற்ற பேச்சுவார்ததைகளுக்கு இருதரப்பினரும் இணங்கியுள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சோல்ஹைய்ம், பெல்ஜியத்தில் நடைபெற்ற மகாநாட்டின் இறுதியில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த மோதல்கள் தற்காலிகமாகவேனும் தணிந்துவிடும் என்பது வரவேற்கத்தக்கதே.

ஆயினும் இப்பேச்சு வார்த்தைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பூரண விருப்புடன் இணங்கவில்லை என்பதை, சோல்ஹெய்மின் அறிவித்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேக்கலிய ரம்புக்வெல வெளியிட்ட கருத்துக்கள் உணர்த்துகின்றன. முதலில், நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகளுக்கு தாம் இணங்கியதை மறுதலித்த அவர், அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல், பேச்சுவார்த்தைக்கான இடம் ஆகியவற்றை ஒரு தலைப்பட்சமாக இணைத்தலைமை நாடுகள் நிர்ணயித்துள்ளதையிட்டு அதிருப்தியையும் தெரிவித்துள்ளார். அத்துடன், முல்லைத்தீலில் விமானக் குண்டு வீச்சில் மாணவிகள் கொல்லப்பட்டதை இணைத்தலைமை நாடுகள் கண்டித்திருப்பதையிட்டும் கவலை தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில், இணைத்தலைமை நாடுகளின் ஆழுத்தங்களுக்கும் நெருக்குதல்களுக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இப் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியுள்ளது என்பது தெளிவாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு தற்சமயம் இராணுவ ரீதியில் பலவீனமாக உள்ளது என்ற கணிப்பிற்கு இலங்கை இராணுவம் வந்துள்ளது. இக்கணிப்பின் அடிப்படையில், இன்னும் சிறிது காலத்திற்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் மேலும் பலவீனப்படுத்துவதற்கே விரும்புகின்றது. இதனையே, ஜே.வி.பி. ஹெல உறுமய போன்ற கட்சிகளும் முன்வைக்கின்றன.

ஆயினும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை மீறிச் செயற்பட முடியாத நிலையில், பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கியுள்ளது. விடுதலைப் புலிகளும், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து இராணுவம் பின்வாங்காத வரையில் பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கமாட்டோம் எனத் தெரிவித்திருந்தனர். எனினும், சர்வதேச சமூகத்தின் அழுத்தமும், களயதார்த்தமும் அவர்களையும் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைத்துள்ளது.

அதேசமயம், கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களால், இருதரப்பினருக்கும் இடையே பரஸ்பர அவநம்பிக்கை அதிகரித்துள்ளதே அல்லாமல் எந்த விதத்திலும் குறையவில்லை. மொத்தத்தில், இருதரப்பினரும் இதுவரையில் கொண்டிருந்த நிலைப்பாடுகளிலிருந்து மாறாமலேயே பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளளனர். ஆகவேதான், இப்பேச்சுவார்த்தைகள், நீதியான ஓர் சமாதானத்தை நோக்கிய முன்நகர்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ள இருதரப்பினருக்கும் இடையே ஒரேயொரு விடயத்தில் மட்டும்தான் இணக்கப்பாடு உள்ளது.

அதாவது சர்வதேச சமூகத்தைத் திருப்திப் படுத்துதல் என்பதில் மட்டும்தான் இருதரப்பினருக்கும் இடையே பொதுவான இணக்கப்பாடு உண்டு. ஆகவே, இம்முறை பேச்சு வார்த்தைகள் கணிசமான நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இப்பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகையில், இருதரப்பினரும், தத்தமது இராணுவ பலத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதிலேயே, முழுக்கவனத்துடன் ஈடுபடுவர். இது சர்வதேச சமூகம் அறியாததொன்றல்ல. ஆயினும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தினால் ஏற்படப்போகின்ற போரற்ற சூழல் வரவேற்கத்தக்கதே. போரற்ற சூழல் தானாகவே சமாதானத்திற்கு ஒரு பொழுதும் இட்டுச் செல்லாது. இப்போரற்ற சூழலில், இலங்கையின் இன முரண்பாட்டிற்கும் யுத்தத்திற்குமான, அடிப்படைக்காரணிகள் விரைவாக இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான மார்க்கங்கள் காணப்படவேண்டும். அதாவது, இனப்பிரச்சினைக்கு, நீதியான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டால் மட்டுமே, இப்பேச்சுவார்ததைகள் அர்த்தமுள்ள ஓர் சமாதானத்தை நோக்கிய முன் நகர்விற்கு இட்டுச் செல்லும். இவ்வாறான ஓர் தீர்வை முன்வைப்பதற்கு சர்வதேச சமூகம் தற்போது பிரயோகிக்கும் அழுத்தத்தைவிட அதிகமான அழுத்தத்தை இலங்கை அரசு மேல் செலுத்த வேண்டி ஏற்படலாம். அதனைச் செய்ய வேண்டியதும் இன்றைய காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகின்றது.

நன்றி: 'வைகறை' 15.09.2006

Sunday, August 27, 2006

தேனி - நிதர்சனம் இணையத்தளங்களின் பொறுப்பற்ற போக்கு!

தற்போது தமிழில் ஏராளமாக இணையத்தளங்கள் இலங்கைச் செய்திகளையும், தமிழர் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும், ஏனைய பல விடையங்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் கணிசமான இணையத்தளங்கள் புலிகளின்; அரசியலுக்கெதிராகவும், அவர்களின் போராட்ங்கள், சிந்தனைகள், நடவடிக்கைள் போன்றவற்றுக்கெதிராகவும் தமது எதிர்ப்பினையும், கருத்தினையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்கள் பெரும்பாலும் புலிகளினால் தடைசெய்யப்பட்ட, ஏனைய தமிழ் இயக்கங்களினதும், அல்லது புலி அரசியலுக்கு எதிரான கருத்துக் கொண்டவர்களினாலும் நடாத்தப்படுகின்றது.

அந்த வகையில் தேனி இணையத்தளம் பரவலாக அறியப்பட்ட ஒன்றாம். ஆரம்ப காலங்களில் தேனியில் வரும் எழுத்துகள் புலிகளின் போக்கிற்கு மாற்றுக் கருத்தாக அல்லது புலிகளின் அரசியலை கருத்தியல் ரீதியாக விமர்சிக்கும் போக்கினைக் கொண்ட தளமாக காணக்கூடியதாக இருந்து. பின்னர் வெறும் புலி எதிர்ப்புப் பிரச்சாரமாகவும், புலிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தகவல்களை திரித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதில் சிறிதும் தயக்கம் காட்டாமல் வெளியிடும் அளவிற்கு அவர்களின் வறட்டு அல்லது சீரழிந்த அரசியல் சிந்தனை மேலோங்கியிருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த வருடம் புங்குடுதீவு என்னும் கிராமத்தில் ஒரு இளம் பெண் தனது பெயரியதாயார் வீட்டுக்கு ஒவ்வொரு மலைப்பொழுதிலும் சென்று பின்னர் மறுநாள் காலையிலேயே தனது வீட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பெண் பெரியதாயார் வீட்டுக்குச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் முகாமைத் தாண்டிச் செல்வதும் வழக்கம். அவ்வாறு ஒரு நாள் சென்ற போது அங்கிருந்த படையினர் சிலரினால் பலவந்தமாக, கூட்டிச் செல்லப்பட்டு, முகாமிற்கு அருகில் இருந்த, கைவிடப்பட்ட வீட்டிற்குள் வைத்து அந்தப்பெண்ணை பாலியல் வல்லுறவு மேற்கொண்டு, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த பாழ் அடைந்த கிணற்றினுள் வீசிவிட்டுச் சென்றுள்ளார்கள்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அவ்வ+ர் சாதாரண கிராமவாசி என அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களுடனும், அவ்வ+ர் பிரதேச மகளிடமும் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் இந்தச் செய்தியை தேனியில் வேறு விதமாக குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது, அந்தப் பெண் ஒரு புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது புலிகள் அமைப்போடு சம்பந்தப்பட்டவர் என்ற தோரணையில் கட்டுரையாளர் எழுதியிருந்தார். அதை தேனி இணையத்தளம் வெளியிட்யிருந்தது.

ஒரு செய்தியை வெளியிடும் போது அதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையை வாசிக்கும் போது வேணுமென்றே திரித்து எழுதப்பட்டதாக தெரிகிறது. இதனால் தேனியில் வரும் ஏனைய உண்மையான செய்திகள், கட்டுரைகளும் உண்மைக்குப் புறம்பானதாக எண்ணத்தோன்றும் மனநிலையை உருவாக்கும்.

இதேபோன்று கண்மூடித்தனமாக புலிகளை ஆதரிக்கும் இணையத்தளமான ‘நிதர்சனம்’ ஆதாரமற்ற தகவல்களையும், மாற்றுக் கருத்தாளர்களையும், முற்போக்கு நிந்தனையாளர்களின் நடவடிக்கைகளுக்கு சேறு ப+சும் விதமாகவும், காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்ப்பதே தமது தலையாய கடமையாகவும் எடுத்துகொண்டு செய்திகளை பரப்புவதில் முன்நிற்கின்றார்கள். இவர்களின் கருத்திற்கு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை புனைந்து வெளியிடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்ல.

அண்மையில் கொழும்பு தெகிவளையில் சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ் லோகநாதன் பற்றிய செய்தியை வெளியிடும் போது கடைசிப் பத்தியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்கள். ‘கேதீஸ் தொடர்பான 'அண்டவாளங்களை' வெகுவிரையில் வெளியிடுவோம்’ என்று. கேதீஸ் தொடர்பாக விமர்சனங்கள் இருப்பது வேறு, சேறு ப+சுவது வேறு. விமர்சனங்கள் காழ்ப்புணர்வற்றனவாக இருக்க வேண்டும். கேதீஸ_க்கு ஈழத்தமிழர் தொடர்பான பிரச்சினையில் நிறையவே பங்கிருக்கின்றன. அதற்கான அவரின் உழைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. (25.80.2006 இல் கனடா - வைகறை பத்திரிகையில் அவர் தொடர்பாக கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கின்றது) ஆனால் நிதர்சனம் போன்ற தளங்கள் இம்மாதிரியான செய்திகளை தொடர்ச்சியாக வெளியீடுவார்களானால் அவர்கள் தொர்பான நம்பகத்தன்மையை இழந்து விடுவார்கள்.

செய்தித் தளங்கள் தங்களுக்குரிய உரிமையையும், சுதந்திரத்தையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து செயற்பட வேண்டும். இல்லாது விடின், மக்கள் ஊடகங்களாக இவைகள் வலம் வரமுடியாதவைகளாகவே இருக்கும்.

Saturday, August 26, 2006

ஆயுதக் கொள்வனவு முயற்சியில் தமிழ் கனேடியர்கள் கைது!

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட விடுதலைப் புலிகளுக்கு பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினரால் (F.B.I) கைது செய்யப்பட்ட எட்டு தமிழர்கள் அமெரிக்க நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு போர்த் தளபாட கொள்வனவில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. இராணுவ உபகரணங்கள் கொள்வனவு தொலைத் தொடர்பு மற்றும் வேறு தொழில்நுட்ப உபகரண கொள்வனவு, நிதி சேகரிப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களூடாக பணத்தை அனுப்பிவைத்தல், அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முற்பட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த சதாஜன் சரத்சந்திரன் (26), சகிலால் சபாரட்ணம் (27), திருத்தணிகன் தணிகாசலம் (37), நடராசா யோகராசா (52), முருகேசு விநாயகமூர்த்தி (57), விஜயசந்தர் பற்பானந்தன் (44), திருக்குமரன் சிவசுப்பிரமணியம் (27) இவர்களோடு தென்னிந்தியாவைச் சேர்ந்த நாச்சிமுத்து சோகிரட்டீஸ்( 54) ஆகியோரே கடந்த 19 ஆம் திகதி F.B.I பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்பது லட்சம் டொலர் முதல் 9 லட்சத்து 37,500 டொலர் வரை முதலில் இவர்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவிருந்ததாகவும், விமான எதிர்ப்பு ஏவுகணையில் ஒன்றைப் பரிசீலிப்பதற்காக எஸ்.ஏ- 18 ரக ஏவுகணை ஒன்றை இவர்களில் ஒருவர் ஓரிடத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பலருக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளிருந்ததுடன் அமெரிக்க அதிகாரிகளுக்குப் பெருமளவு லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் புலிகளுக்கான தடையை நீக்கவும் முயற்சித்து வந்ததாகவும் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். இவர்களது கைது சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்வர்களுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் நாம் செயற்படும் முறை இதுவல்ல என்றும் இப்படி ஒரு காரியத்தை நாம் ஒருபோதும் செய்தது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சதாஜன் சரத்சந்திரன், சகிலால் சபாரட்ணம்இ திருத்தணிகன் தணிகாசலம் ஆகிய மூவரும் Waterloo பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்களாவர். சதாஜன் சரத்சந்திரன் கனேடிய தமிழ் மாணவர் அமைப்புக்கு (Canadian Tamil Students Association) சிலகாலம் தலைவராக இருந்ததுடன்இ 2004ம் ஆண்டு புரட்டாதி மாதம் ரொரன்ரோவில் நடாத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்சியின் ஏற்பாட்டாராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது பொங்கு தமிழ் நிகழ்வு தொடர்பாக இவரது பேட்டி வைகறை பத்திரிகையில் வெளியாகியது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குமாகச் சேர்த்து அனைவருக்கும் 30 வருடங்களுக்கும் குறையாத தண்டனை வழங்கப்படுமெனவும் தெரியவருகிறது.

இந்த விவகாரத்தின் தொடர்சியாக மேலும் மூன்று தமிழ் கனேடிய இளைஞர்கள் ரொறன்ரோவில் RCMP பொலிசாரால் கைது செய்யப்படடுள்ளனர். Waterloo பல்கலைக்கழக மாணவரான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (26) கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் இதே பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பிரதீபன் நடராஜா (30) மற்றும் ரமணன் மயில்வாகணம் (29) ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். ரமணன் மயில்வாகணம் University of Waterloo Tamil Students Associationன் உதவித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான விசாரணைக்காக பிரம்ரன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொலிசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இவர்களது கைது தொடர்பாக கனேடியன் தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் Puபாலபிள்ளை கருத்துத் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ்சமூக அமைப்புகள் பலவற்றில் இணைந்து செயற்பட்டவர்கள் என்றும், எவரும இப்பாடியான அமைப்புக்களில் இணைந்து செயற்படமுடியும் என்றும், என்னைப் பொறுத்தவரையில் நான் உறுதியாக நம்புகின்றேன், அவர்கள் “Loose cannons..” (Dangerously uncontrollable people) போல் செயற்பட்டுள்ளார்கள் எனத்தெரிவித்துள்ளார்.
RCMP பொலிசார் இக் கைது நடவடிக்கை பற்றிக் குறிப்பிடுகையில் FBI யினரும் RCMP யினர் குறிப்பாக RCMP National security program and the Integrated National Security Enforcement Team (INSET) in Toronto மற்றும் அமெரிக்க சட்ட அமூலாக்கப் பிரிவினர் ஆகியோரின் ஒருங்கிணைக்கப்டட்ட நடவடிக்கையின் காரணமாக விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பலர் மீது அமெரிக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இக்கைதுகள் தொடர்பாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Stockwell Day நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில், மேற்படி கைதுகள்இ தகுந்த சமயத்தில்; தமது அரசு எடுத்த நடவடிக்கையினை பட்டவர்தனமாக வெளிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் கடந்த ஏப்பிரல் மாதம்இ எமது மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக விடுதலைப்புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்பது என்ற காததிரமான முடிவினை எடுத்தோம். மேற்படி கைதுகள் பயங்கரவாத அச்சம் தொடர்பான எமது அரசின் கடும் கண்காணிப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி: வைகறை (25.08.2006)

கனேடிய தமிழ் ஊடகங்களும், தமிழர்களும்!

கனடாவில் பத்திற்கும் மேற்பட்ட வாராந்த தமிழ்ப்பத்திரிகைள் வெளிவருகின்றன. நிறையப் பக்கங்களுடன் வெளிவரும் இப் பத்திரிகைகளில் விளம்பரங்களே அதிகமாக காணப்படுகனிறன.

‘விளம்பரங்களே பத்திரிகையின் அச்சானி’ இது சான்றோர் வாக்கு. ஆனால் இங்கே விளம்பரங்களுக்கே பத்திரிகை என்று ஆகிப்போற்று. ஒரு பத்திரிகையின் தரமும், போக்கும் அச்சமூகத்தை பிரதிபலிக்கும் காரணிகளில் ஒன்று. ஆனால் எந்தப் பத்திரிகையும் அதை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.

சில காலமாக என்னுடைய அவதானிப்பின் படி, பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளும், கட்டுரைகளும், அல்லது ஏனைய படைப்புகளும் ஒரு சார்பானதாகவே இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது வெளியிடும் செய்திகளிலோ அல்லது கட்டுரைகளிலோ எந்தளவிற்கு நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை போன்றவற்றை யாரும் கருத்தில் கொள்வதில்லை. அல்லது அது பற்றி சிலாகிப்தும் இல்;லை. தமது சார்புநிலைகளுக்கு ஏற்றமாதிரி செய்திகள் வெளிவரவேண்டும் என்பதே இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் கணிப்பு அல்லது விருப்பம்.
இதை எழுதுவற்கு தூண்டியதன் காரணம் என்னவென்றால், அண்மையில் இலங்கையில் நடபெற்றுக் கொண்டிருக்கின்ற போர்ச் சம்பங்கள் தொடர்பாக இலண்டன் பி.பி.சி. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நேரடித்தகவல்களாகவும், நேர்காணல் ஊடாகவும் தனது சேவையை நடத்திக்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையனிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டபோது அவர் இரத்தினச்சுருக்கமாக சில பதில்களை தெரிவித்திருந்தார். அது பலரின் கவனத்தையும் பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இதே போன்று இன்னொரு முறை அவருடனான நேர்காணலின்போது அதாவது மூதூர் யுத்தமும், முஸ்லீம் மக்கள் இடம்பெயர்வும் தொடர்பானது. அப்போது இளம்திரையனின் பதிலில் கொஞ்சம் நெருடல் காணப்பட்டது. இதைக்கேட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்கள் (ஈழத்தில் பி.பி.சியின் சேவையை 99வீதமானவர்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை என்பது எனது கருத்து) பொங்கி எழுந்துவிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இளந்திரையனை சங்கடத்தில் மாட்டும் கேள்விகளை பி.பி.சியினர் கேட்கக் கூடாது என்பது தான். அல்லது இலங்கை இராணுவப்பேச்சாளரிடம் இவ்வாறு பி.பி.சியினர் நடந்துகொள்வார்களா? என்பதே. இம்மாதிரியான மனநிலையிலேயே இன்று அனேகமான புலம்பெயர் மக்கள் வாழ்கின்றார்கள். இவ்வகையினரின் மனநிலையை மேலும் மோசமாக்க புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் தனியார் வானொலிகள், பத்திரிகைகள் வலுவ+ட்டுகின்றன.

23ம் புலிகேசியில் வரும் வசம்போல் சொல் புத்தி, சுயபுத்தி. புலம்பெயர் மக்கள் சொல் புத்தியாகவே இருக்கிறார்கள். உய்த்துணரும் பழக்கத்தை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

தற்போது பி.பி.சியை இத்தமிழர்கள் கேட்கக் கூடாது, புறம் தள்ள வேண்டும் என்று புலம்புகிறார்கள்.

‘சந்திரனைப் பார்த்து நாய் வவ் வவ் வவ்.... செய்தா யாருக்கு நட்டம்?

Sunday, August 20, 2006

அமைதிப்பேரணில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேடியவை!

கடந்த வாரம் கொழும்பில் ‘தேசிய போருக்கு எதிரானவர்கள’ நடடித்திய அமைதிப்பேரணியில் குறுக்கிட்ட ‘தேசிய பிக்கு முன்னணியினர்’ கிளிநொச்சிக்குப் போய் அமைதி குறித்து பேசுங்கள் என்று போருக்கு எதிரானவர்களிடம் வாதிட்டபோது இருசாரார்களுக்கிடையிலும் வாக்குவாதமும், மோதலும் மூண்டு, பிக்குமார்கள் பரஸ்பரம் அவர்களின் அங்கிகளை (உடை) பிடித்து இழுபட்டதை இணையத்தள புகைப்படங்களிலும், ஏனைய செய்திகளிலும் காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பாக தமிழர் தரப்பு செய்திகளில் மிகைப்படுத்தி, அவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அளவிற்கு மீறிய நகைப்புடன் பார்க்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

கொழும்பு நகரில் பல அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலா மக்கள் சிங்கள இனத்தவர்கள். அவர்களோடு சில சிங்கள அரசியல்வாதிகளும், ஏனைய சமாதான விரும்பிகளும் இலங்கையில் போர் மூண்ட காலங்களில் இருந்து இன்று வரை அவ்வப்போது போருக்கெதிராக தமது எதிர்ப்பினையும், ஆர்பாட்ட ஊர்வலங்களையும், நடத்தியும், போரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு, நாட்டில் வாழும் மூவின மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு போரை முடிவிற்கு கொண்டுவரும் படியும் அறிக்கைள் அனுப்புவது வழக்கம்.

அது போன்றே இம்முறையும் ஒரு நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இலங்கையின் சூழலில் யுத்தத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஜனநாயக செயற்பாட்டிற்கும், பாரிய எதிர்ப்புக் கிளம்பும் சூழல் கொழும்பில் காணப்படுவதற்கு அங்கு மாறியிருக்கும் அரசியலே காரணமாக இருக்கின்றது.

இந்த எதிர்ப்புக் குழுவினரை நெறிப்படுத்தி, வழிநடத்த சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருக்கும், ஜே.வி.பி. சிஹெல உருமைய, பிக்குகள் சங்கம் .... போன்ற அமைப்புகளும், அவை சார்ந்த ஏனைய அமைப்புகளும் பின்னணியில் இருப்பதும் முக்கிய காரணம்.

ஆனால் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையிலும் சமாதான விரும்பிகள் ‘யுத்தத்திற்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுவது மிகவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம். இவ்வாறானவர்களின் பல வெளிநடவடிக்கைகளினால் தான் பல சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தொடர்பாகவும், தமிழினப்பிரச்சனை தொடர்பாகவும் அவர்கள்அறியக்கூடியதாக இருக்கின்றது என்பதை பல தமிழர்களுக்கு தெரிவதில்லை. அவ்வாறு அவர்கள் அறியும்போது, தமிழர்கள் தொடர்பாக அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த எண்ணக்கருத்தில் மாற்றம் நிகழ்வதற்கான சூழல் உருவாகும்.

அதே போன்று கொழும்பிலோ அல்லது ஏனைய சிங்கள புறநகர் பகுதிகளிலோ ஒரு மனிதக் குண்டு வெடிப்பினால் அல்லது வேறு வகையான குண்டு வெடிப்பினால் பெருந்தொகையான சிங்கள பொதுமக்கள் பாதிக்கப்படும்போது, தமிழர் பிரதேங்களினல் எதிர்ப்புத் தெரிவித்த வரலாறு இருந்திருக்கின்றதா? அல்லது ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? என்பதை நாம் நம்மைப்பார்த்து கேட்டவேண்டிய கேள்வி. அல்லது அவ்வாறான ஒரு ஏற்பாட்டை தமிழர்கள் செய்வதில்லை.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் நிறையவே கற்றுக்கொள்ளவும், எம்மை மாற்றிக் கொள்ளவும் வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

போர்க் களத்தில் நடப்பது என்ன?

இன்று இலங்கையின் நிலவரம் என்ன? என்றால் போர்க்ளத்தில் நிற்பவர்களைத் தவிர யாருக்கும் குறைந்த பட்ச உண்மை நிலை தெரியாது. புலிகளும், அரசபடைகளுக்கும் இடையில் எழுதுமட்டுவன் பகுதியில் உக்கிரமான சண்டை நடைபெறுகின்றது என்பது உண்மைதான். ஆனால் யுத்தம் புரிபவர்கள் சார்பாக பரஸ்பரம் வெளியிடும் இழப்புகளின் எண்ணிக்கைதான் மிக முரண்பாடான செய்தியாக இருக்கின்றன.

இருசாராரின் எண்ணிக்கைகளையும் கூட்டிக் கழித்து நமது பொது அறிவைக்கொண்டு ஒரு முடிவிற்கு வருவதில் 80வீதமான உண்மையிருக்கும். போர் நடக்கும் சூழலில் இருசாராரும் இழப்புகளின் உண்மைநிலையை வெளியிடமாட்டார்கள். அது அவர்களின் போர்நடவடிக்கைகளைப்பாதிக்கும். அந்த வகையில் இன்றைய நிலையை ஆராய்ந்தால்,
உண்மையில் புலிகள் முகமாலையில் இருந்து எழுதுமட்டுவன் வரை சென்றுள்ளார்கள், கனிசமான இழப்புகளைச் சந்தித்துக்கொண்டு. அதே நேரம் இன்று வரை அவர்களால் மேல் நோக்கி நகரமுடியாதவாறு இரு பகுதியினரும் சண்பிடிக்கின்றார்கள். அரச இராணுவமும் என்ன விலை கொடுத்தாவது புலிகளை மேலும் முன்னேற விடாமல் உக்கிராமாக சண்டைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். புலிகளும் அவ்வாறே உக்கிரமான மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

யாழ் பலாலி விமானத்தளத்தைப் பொறுத்தவரை, புலிகளி;ன் தொடர்ச்;சியான ஆட்லெறி வீச்சினால் அதன் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதாக இராணுவமே ஒத்துக்கொண்டிருக்கின்றது. பலாலியை அண்டி வாழும் மக்களின் கருத்துக்களும் அதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இது புலிகளைப் பொறுத்தவரை சாதகமான விடயம் தான்.

இது இவ்வாறிருக்க, யாழ்நிகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் பல இளைஞர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும், காணமல் போவதும் பரவலாக நடந்துகொண்டிருக்கின்றது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதால் இராணுவத்தினருக்கும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுததாரிகளுக்கும் நிறையவே தொர்பிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு இலங்கையில், இந்திய இராணுவத்தினர் இருந்த காலங்களில் முகமூடி அணிந்து, தலையாட்டிக் காட்டிக்கொடுத்த மாதிரி, தற்போது இலங்கை இராணுவத்தினரும் பரவலாக தலையாட்டியை வைத்து பல இளைஞர், யுவதிகளை கைது செய்துவருகிறார்கள். பொருட்களின் விலையும் திடீர் திடீர் என அதிகரித்திருப்பதாக அறிய முடிகின்றது.

கடந்த வாரம் புலிகளின் தந்திரோபாய இராணுவ நடவடிக்கையாக, புலிகளின் ஒரு பிரிவினர் கடல் மார்க்கமாக பல வள்ளங்களில் கிளாலியூடாக சென்று தரையிறங்கி அரச இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை நடத்த மேற்கொண்ட திட்டம் வெற்றியளிக்காமல் கணிசமான போராளிகளை இழந்தும் அவர்களின் நடவடிக்கைகளை கைவிட்டு திரும்பிய சம்பவமும் நடைபெற்றது. இறந்த போராளிகளின் உடல்களை அரச இராணுவத்தினர் கைப்பற்றி இருந்தார்கள் என்பதும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதே போல் இராணுவத்தினர் தமது படைகளின் இறந்த, காயமடைந்த உடல்களை அப்புறப்படுத்துவதை தம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

எது எப்படியோ, கொழும்பிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் உள்ள பொது மருத்துவமனைகளில் காயமடைந்த இராணுவத்தினருக்காக முன்கூட்டியே இடங்களை ஒதுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாசமறுப்பான்

நாசமறுப்பான்