Sunday, July 23, 2006

தமிழனே தமிழனைக் கொல்லும் கறுப்பு ஜூலை

இந்த வாரம் கறுப்பு ஜூலை நினைவு கூரப்படுகிறது. யாழ்பாணம் தின்னைவேலியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவ ரக் வண்டி புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி சின்னாபின்னமாகியதில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இராணுவத்தினர் அப்பகுதியல் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் இலங்கையின் தென்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட போது சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இனக்கலவரம் மூண்டது. தமிழர்கள் வகைதொகை இன்றி அடித்தும், வெட்டியும், கொல்லப்பட்டனர். பல தமிழர்கள் உயிருடன் எண்ணை ஊற்றித் தீ மூட்டிக் கொல்லப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் சூறையாடப்பட்டும், சிதைக்கப்பட்டும், தீயிட்டுக் கொழுத்தியும் தமது கோபத்தைத் தணிக்க முயன்றனர். இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நாடு ப+ராகவும் வன்முறை கட்டவித்து விடப்பட்டது. இதற்கு அன்று இலங்கையை ஆட்சி செய்த ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் உறுதுணையாக இருந்தது.

இதன் பின்னர் தமிழர்கள் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். பின்னர் கட்டம் கட்டமாக கப்பல் மூலம் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இந்தக்காலப் பகுதியிலே வெலிக்கடைச் சிறையில் இருந்த குட்டி மணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட பல தமிழ்க் கைத்திகள் சக சிங்களக் கைதிகளால் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். இதுவே இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்தத கறுப்பு ஜூலை.
அன்று முதல் இன்று வரை இந்த கறுப்பு ஜூலையை தமிழர்கள் நினைவு கூருகின்றனர். அன்றைய வலியை இன்றும் எண்ணிப்பார்க்கின்றார்கள். அன்றைய இழப்புகளை இன்றும் புலம்புகிறார்கள். எத்தனை எத்தனை உயிர்கள், எவ்வளவு கோடி பெறுமதியான சொத்துக்கள். எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போனது. (சிங்களவர்கள் அனுபவித்ததை விட)
இந்த நிகழ்வுகள் நடந்து இன்று 23ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் ஈழத்தில் எந்தவொரு நல்ல மாற்றங்களும் நிகழ்நத மாதிரி இல்லை. இன்றும் இலங்கையில் இருந்து வரும் செய்திகளைப்பார்த்தால் கண்ணிவெடியில் சிக்கி இராணுவத்தினர் இறப்பதும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்வதும் நாளாந்த நிகழ்வுகளாக இருக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க, புலிகளும் கருணா அணியினரும் பரஸ்பரம் மாறி மாறி கொலை செய்வதும், புலிகளால் தடைசெய்யப்பட்ட ஏனை தமிழ் இயக்க அங்கத்தவர்களை புலிகள் கொல்லுவதும், இராணுவத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் துணைப்படையினர் புலிகளையும், அவர்கள் சார்ந்தவர்களை கொலை செய்வதும், பிழையான, தெளிவற்ற முடிவுகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், இராணுவத்திற்கு புலிகளால் வைக்கப்படும் கண்ணிவெடிகளில் பொதுமக்கள் கொல்லப்படுவதும், இன்று சர்வசாதாரணமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
வன்னியனின் புளக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது நெருங்கிய சகாக்களின் சாவு பற்றியும் அவற்றுக்காக பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டது, தனது சகாக்களிடம் இருந்த போராட்ட உணர்வு, விடுதலை மீதுள்ள பற்று என்று அவர்கள் பற்றி எடுத்தியம்பியுள்ளார். அதேபோன்ற பல நூறு தமிழ்த்தாய்மார்கள் பெற்றெடுத்த புதல்வர்கள் சகபோராளிகள், தமிழர் விடுதலையே ஒரே குறியாகக்; கொண்டவர்கள் எத்தனை போர் பிரபாகரனின் ஆளனிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எத்தனை மிதவாதத் தமிழ் அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்;கள்? எல்லாவற்றிக்கும் கொலைதான் சரியான முடிவாக இருந்திருந்தால் தமிழருக்கு எப்போவோ பிரபாகரன் விடுதலை பெற்றுக் கொடுத்திருப்பார். ஆனால் இதை இன்று வரை அவர் உணராதிருப்பது தான் தமிழர்களுக்கு கிடைத்த துர்ப்பாக்கியம்.
தமிழர் விடுதலைப்போராட்டத்தில் பல இயக்கங்கள் முளைத்திருந்தன அவர்கள் எல்லோருக்கும் தமிழர் விடுதலையே கனவாக இருந்ததில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று நினைக்கின்றேன். ஆனால் வேறுபல உதிரிச்செயற்பாடுகளில் முரண்பட்ட கருத்துக்களுடன் இருப்பது இயற்கையே அது தவிர்க்கமுடியாது. ஆனால் அவற்றுக்கெல்லாம் உன்னத தீர்வு முரண்பட்டவர்களை கொலை செய்வது என்பது பிரபாகரனின் தீர்வாக இருப்பது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக இருக்கின்றது.

ஒருவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார், காந்தியும் சுபாஸ்சந்திரபோசுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தன ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இருவரும் தமது வேறுபாடுகளை உணர்ந்து செயற்பட்டார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு உரையாடலில் சொல்லிருக்கிறார் ‘தான் சுபாஸின் போராட்ட வரலாறு பற்றி பதிவு செய்யப்பட்ட புத்தகங்களை விரும்பி வாசிப்பதாக’. அவ்வாறு சொல்லும் பிரபாகரனால் எப்படி பிற்போக்குத் தனமான கொலைகளை செய்ய முடிகின்றது என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரு துன்பியல் நிகழ்வே.
கறுப்பு ஜூலையை நினைவு கூரும் நாம் இன்று என்ன நடக்கின்றது என்பதை பற்றி சிந்திப்பதை மறுந்து விடுகின்றோம். இன்று இலங்கையில் நடைபெறும் கொலைகள்; யாரால் யாருக்கு நடக்கின்றன? இலங்கை இராணுவத்தினால் கொல்லப்படும் தமிழர்க்ளை விட தமிழர்களால் தமிழர்கள் கொல்லப்படும் அவலம் தான் அதிகரித்திருப்பதை நாளாந்த செய்திகளில் காணக்கூடியதாக இருக்கின்றது.

மாற்று இயக்கங்களையும், மாற்று கருத்துக்கொண்டவர்களையும் அழித்தொழிப்பது தான் புலிகளின் இலட்சியம் என்று இருப்பதை விட்டுவிட்டு தமிழர்களின் நியாயமான உரிமைக்காக போராடுவதை புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும் கருத்தொருமைக்கு வராதவரை தமிழனே தமிழனை அழிப்பதில் சிங்களப்பேரினவாதிகளை விட முன்னணியில் நிற்பார்கள் என்பது நம்முன் இருக்கும் உண்மை.(

).

Saturday, July 22, 2006

உப்புக் கலந்த சுவை இருக்கிறதே அது ஒரு அலாதிதான்....

இன்று காலை சிறு தூறல்.... கொஞ்சம் குளிர்ச்சி..... அற்புதமான காலைப்பொழுது. காரணம் கடந்த வாரம் முழுக்க கனடாவில் வெயிலின் கொடுமை அப்பப்பா தாங்க முடியாது. அதுதான் என்னவோ வானை மறைத்த கருமேகங்களும், மழைத் தூறல்களும் என்னை இப்படி உணர வைத்திருக்கிறது.

இன்று சனிக்கிழமை தொழிக்குப் போகவேண்டியதில்லை. நேற்று இரவு நண்பனின் வருகை, பக்கத்து உணவுச் சாலையில் இரண்டு முடா (பிச்சர்) அலைக்சாந்தர் கீற்ஸ் பீர்ரும், ‘சிக்கன் சுவலாக்கி’ இரவுச்சாப்பாடும் வயிறு முட்ட விழுங்கிப்போட்டு நாலு அரசியலை அலசிப்போட்டு வந்து படுத்தது தான்.

கொழும்பில இருந்தபோது வழக்கமாக சனிக்கிழமைகளில் கடைக்குப்போய் பத்திரிகைகளை வாங்கி வந்து அம்மா போடுற லக்ஸ்பிறே மா தேத்தண்ணி தண்ணியையும் குடித்துக்கொண்டு செய்திகளையும், கட்டுரைகளையும் வாசிப்பது வழங்கம்.

அதுபோன்ற ஒரு உணர்வில் பாலா கடை தோசையும் சாம்பாரும் இரண்டு உளுந்து வடையும் சாப்பிப்பிட்டுப் போட்டு பக்கத்து தமிழ் கடையில் இந்த வாரம் வந்த இலவச தமிழ்ப்பத்திரிகைகளோட மெல்லிய மழைத் தூறல்களில் நனைந்து கொண்டு வரும்போது, தூறல்கள் எல்லாம் சேர்ந்து சிறு துளிகளாக மாறி தலையில் இருந்து நெற்றியால் வழிந்து மூக்கு நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த மழைத் துளியை நாக்கினால் தட்டும்போது உப்புக் கலந்த சுவை இருக்கிறதே அது ஒரு அலாதிதான். (என்னென்று உப்புச் சுவை வந்தது என்று கேக்கக் கூடாது. இப்ப விஞ்ஞான விளக்கம் தர எனக்கு பொறுமையில்லை) தமிழில் ஒரு பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையில’. கனடாவில வெளிவரும் அனேகமான தமிழ் பத்திரிகைகளில உப்பு இருக்கோ இல்லையோ, குப்பையில போடவேண்டிய சமாச்சாரம் தான். ‘என்ன கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சொல்லுற மாதிரி சிலர் யோசிக்கலாம். உண்மைதான் நான் விளம்பரங்களைப் பற்றி கதைக்கவில்லை. மற்றவிடையங்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன்.’

கனடாவில இருந்து ‘முழக்கம்’ என்ற பத்திரிகை வெளிவருகின்றது. அதனுடைய எல்லாப்பக்கங்களின் உச்சியில ஒரு வாசகம் இருக்;கும். ‘புலிகளும் இந்நாள் இல்லையேல் எலிகளும் தின்னும் இத்தமிழர் இனத்தையே!’ ‘தேங்காச்சொட்டு, பற்பொடி, சவர்க்காரத்துண்டு’ லெவலுக்கு (மட்டம்) தமிழர் இனத்தை முழக்கம் கணிப்பிட்டிருப்பது மாதிரியே எனக்குப்படுகிறது.

முழக்கத்தின் இரண்டாவது பக்கத்தில் ‘மக்கள் களம்’ என்று இருக்கின்றது. அதில் வாசகர்களின் கருத்துக்கள் கொஞ்சம் இருக்கும். (அதில் அனேகமானவை பத்திரிகை நடத்துபர்களே கருத்துக்களை எழுதுவது) அதற்குப் பக்கத்தில் பொன்னர், மன்னர் என்ற உரையாடல் பத்தியும் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது இந்தப் பத்தி குறிப்பிட்ட சிலருக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது என்றால் அது கலப்படம் அற்ற உண்மை.
(இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் வியாபாரத்திற்காக எதை எல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்ல முயற்சிக்கிறேன்.)

பார்ப்பணிய எதிர்ப்புவாதம், தமிழ்த்தேசியம், தூயதமிழ் சொற்றகள், தமிழ்நாட்டு திருமாவளவன் புலம்பல், பெரியாரியம்..... என்று அவ்வப்போது விளம்பரங்கள் போட்ட மிகுதிப்பக்கங்களில் போடுவது வழக்கம்.

இம் முறை பொன்னர் மன்னர் பகுதியில், கடந்த வாரம் ‘வைகறை’ என்ற பத்திரிகையில் வெளிவந்த நிருபாவின் செவ்வியை (சுணைக்கிறது, அச்சாப்பிள்ளை ஆசிரியர்) அலசியிருந்தூர்கள். அதில் நிருபாவிடம் பெண் போராளிகள் பற்றிய கேள்வியில் அவர் சொல்லுகிறார்,
“பெண்புலிகளின் பெண்விடுதலை என்பது ஒரு மாயை என்றே எனக்குத் தோன்றுகின்றது போராட்டச் சூழலில் போராளி என்ற வகையில் ஒர பொதுத்தன்மை தான் இது. மற்றும்படி முடிவெடுக்கும் அதிகாரங்கள், தன்மைகள், தகமைகள் ஆண்களிடமே தேங்கிக்கிடக்கின்றது. போராட்டச் சூழல் நிறைவு பெறும் போது இவர்கள் மீண்டும் “அதே பெண்’ ஆகவே வீட்டுக்கு அனுப்படுவார்கள். இதே நிலையே இரண்டாம் உலகயுத்தத்தின் போது ஜெர்மனியிலும், மற்றும் பல நாடுகளிலும் நடந்திருக்கின்றது என்பது தான் வரலாறு.”

நிருபாவின் இந்தக் கருத்திற்கு முழக்கத்தில் ‘விலாவாரியாக நல்கல்’ அடித்திருந்தார்கள்.

பிறகு அடுத்தடுத்தடுத்த பக்கங்களை புரம்போது கடந்தவாரம் நிருபாவின் புத்தக வெளியீட்டுக்கான முழுப்பக்க விளம்பரம், வெளியீடு முடிந்த பிற்பாடும் இந்தப் பத்திரிகையில் வெளிவந்திருப்பதை பார்த்தபோது ஆகா... ஆகா.... நல்லாச் செய்யுறாங்கள். இது ஒரு ‘பிள்ளையார் சுழி’ மட்டும்தான்
இதெல்லாம் பார்த்த பிற்பாடு முழக்கத்திடம் நையாண்டியா ஒரு கேள்வி கேட்க வேணும் போல் இருந்தது.

‘எலியிடம் இருந்து தமிழ் மக்களை புலி காப்பாற்றுகின்றது பிறது புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற யாரிடம் போவது இதையும் முழக்கம் நேரகாலத்தோட கண்டு வைப்பது நல்லது.

பாவம் தமிழ் மக்கள்
குகையின் வாயிலில் நிற்கின்றார்கள்....