கடந்த வாரம் கனடாவின், தொரொண்டோ நகரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் யுத்தம் காரணமாக, அப்பிரதேசத்தில் அகப்பட்டு தவிக்கும் மக்கள் இராணுவ ஷெல் வீச்சுகளாலும், விமானக் குண்டு வீச்சுகளாலும் நாளாந்தம் கொல்லப்பட்டும், காயப்பட்டும் வரும் இன்றைய சூழ்நிலையில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் தமிழ் கனேடியர்களால் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆங்கில ஊடகங்களுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி இருந்த போதும், பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.
போர் நடைபெறும் பகுதிகளில் வாழும் தமது உறவுகளையும், உயிரைப் பறிகொடுத்த சொந்தங்களையும் நினைத்து கணிசமானவர்கள் கலந்துகொண்ட போதிலும், கனடாவில் தற்போது 'மார்ச் பிரேக்' என்னும் பாடசாலைகளின் ஒரு வாரவிடுமுறை காரணமாக மாணவர்களும் அதிகமாக கலந்துகொண்டார்கள். ஏனையோர்கள் வழமையான எந்தக்காரணமும் இல்லாமல், அல்லது எதற்காக இம்மாதிரியான ஊர்வலங்களில் கலந்து கொள்ளுகிறோம் என்ற சிந்தனை அற்றவரகளாக கலந்துகொண்டவர்களும் இதில் அடங்குவர்.
தமீழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினைக் கொண்ட கொடிகளையும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்தினையும் இப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் எடுத்துச் சென்றார்கள். பொதுவாக இம்மாதிரியான ஊர்வலங்கள் தமிழர்களால் நடத்தப்படும்போது இப்படங்களையும், கொடிகளையும் எடுத்துச் செல்வது இங்கு வழக்கம்.
ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பினை கனடாவில் தடைசெய்த பின்னர் இம்முறை அதிகாமாக பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளை கனடா அரசாங்கம் மட்டும் தடைசெய்ய வில்லை. உலகின் பல நாடுகள் இவ்வமைப்பை தடைசெய்துள்ளது என்பது யாவரும் தெரிந்த உண்மை.
சிறுவர்களை தமது படையில் சேர்ப்பது, மனிதக் குண்டுகளைப் பயன்படுத்துவது, பொது இடங்களில் அழிவுகளை ஏற்படுத்தவது, ஏனைய தமிழ் குழுக்களை தடைசெய்தது, ஏக பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துவது, மாற்றுக் கருத்து அரசியலாளர்களை கொலை செய்வது, புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடம் பலவந்தமாக பணம் வசூலிப்பது போன்ற இன்னபல காரணங்களால் கனடா, அமெரிக்கா உட்பட ஏனைய பல ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ளார்கள்.
இது இவ்விதம் இருக்க அண்மைக்கால யுத்தத்தின்போது, யுத்தத்தின் கொடூரத்தைத் தாங்க முடியாத மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லும்போது, அம்மக்களை நோக்கி புலிகள் துப்பாக்கி பிரயோரகம் செய்யதார்கள் என்றும், அதில் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஐ.நா. அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்தானது புலிகள் மீது மேலும் வெறுப்படையவே செய்கின்றது. இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாத புலிகள், அங்கிருந்து தப்பிச் செல்லும் மக்களை சுட்டுக்கொல்லுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
இம்மாதிரியான சூழலில், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கை அரசாங்கத்தின் மீதான தமது எதிர்ப்பினைக் காட்டுவதற்காக ஒன்று கூடும் போது, விடுதலைப்புலிகளின் கொடிகளையும், அவர்களின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படங்களையும் தாங்கிக்கொண்டு 'எமது தலைவர் பிரபாகரன்' என்று சத்தம் போடுவதால் சிக்கலாக இருக்கும் எமது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கவே இவைகள் வழிசமைக்கும். '
- ரமேஷ் -
Sunday, March 22, 2009
Subscribe to:
Posts (Atom)