Saturday, September 16, 2006

சர்வதேச சமூகத்திற்காக ஒரு பேச்சுவார்த்தை

‘வைகறை’ பத்திரிகையின் ஆரியர் தலையங்கம்

ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை அக்டோபர் முற்பகுதியில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறும் என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முன்நிபந்தனையற்ற பேச்சுவார்ததைகளுக்கு இருதரப்பினரும் இணங்கியுள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சோல்ஹைய்ம், பெல்ஜியத்தில் நடைபெற்ற மகாநாட்டின் இறுதியில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த மோதல்கள் தற்காலிகமாகவேனும் தணிந்துவிடும் என்பது வரவேற்கத்தக்கதே.

ஆயினும் இப்பேச்சு வார்த்தைகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பூரண விருப்புடன் இணங்கவில்லை என்பதை, சோல்ஹெய்மின் அறிவித்தலைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேக்கலிய ரம்புக்வெல வெளியிட்ட கருத்துக்கள் உணர்த்துகின்றன. முதலில், நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகளுக்கு தாம் இணங்கியதை மறுதலித்த அவர், அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல், பேச்சுவார்த்தைக்கான இடம் ஆகியவற்றை ஒரு தலைப்பட்சமாக இணைத்தலைமை நாடுகள் நிர்ணயித்துள்ளதையிட்டு அதிருப்தியையும் தெரிவித்துள்ளார். அத்துடன், முல்லைத்தீலில் விமானக் குண்டு வீச்சில் மாணவிகள் கொல்லப்பட்டதை இணைத்தலைமை நாடுகள் கண்டித்திருப்பதையிட்டும் கவலை தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில், இணைத்தலைமை நாடுகளின் ஆழுத்தங்களுக்கும் நெருக்குதல்களுக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இப் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்கியுள்ளது என்பது தெளிவாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு தற்சமயம் இராணுவ ரீதியில் பலவீனமாக உள்ளது என்ற கணிப்பிற்கு இலங்கை இராணுவம் வந்துள்ளது. இக்கணிப்பின் அடிப்படையில், இன்னும் சிறிது காலத்திற்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு, விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் மேலும் பலவீனப்படுத்துவதற்கே விரும்புகின்றது. இதனையே, ஜே.வி.பி. ஹெல உறுமய போன்ற கட்சிகளும் முன்வைக்கின்றன.

ஆயினும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை மீறிச் செயற்பட முடியாத நிலையில், பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கியுள்ளது. விடுதலைப் புலிகளும், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலிருந்து இராணுவம் பின்வாங்காத வரையில் பேச்சு வார்த்தைகளுக்கு இணங்கமாட்டோம் எனத் தெரிவித்திருந்தனர். எனினும், சர்வதேச சமூகத்தின் அழுத்தமும், களயதார்த்தமும் அவர்களையும் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க வைத்துள்ளது.

அதேசமயம், கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களால், இருதரப்பினருக்கும் இடையே பரஸ்பர அவநம்பிக்கை அதிகரித்துள்ளதே அல்லாமல் எந்த விதத்திலும் குறையவில்லை. மொத்தத்தில், இருதரப்பினரும் இதுவரையில் கொண்டிருந்த நிலைப்பாடுகளிலிருந்து மாறாமலேயே பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளளனர். ஆகவேதான், இப்பேச்சுவார்த்தைகள், நீதியான ஓர் சமாதானத்தை நோக்கிய முன்நகர்விற்கு வழிசமைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் இப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ள இருதரப்பினருக்கும் இடையே ஒரேயொரு விடயத்தில் மட்டும்தான் இணக்கப்பாடு உள்ளது.

அதாவது சர்வதேச சமூகத்தைத் திருப்திப் படுத்துதல் என்பதில் மட்டும்தான் இருதரப்பினருக்கும் இடையே பொதுவான இணக்கப்பாடு உண்டு. ஆகவே, இம்முறை பேச்சு வார்த்தைகள் கணிசமான நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இப்பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகையில், இருதரப்பினரும், தத்தமது இராணுவ பலத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதிலேயே, முழுக்கவனத்துடன் ஈடுபடுவர். இது சர்வதேச சமூகம் அறியாததொன்றல்ல. ஆயினும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தினால் ஏற்படப்போகின்ற போரற்ற சூழல் வரவேற்கத்தக்கதே. போரற்ற சூழல் தானாகவே சமாதானத்திற்கு ஒரு பொழுதும் இட்டுச் செல்லாது. இப்போரற்ற சூழலில், இலங்கையின் இன முரண்பாட்டிற்கும் யுத்தத்திற்குமான, அடிப்படைக்காரணிகள் விரைவாக இனங்காணப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான மார்க்கங்கள் காணப்படவேண்டும். அதாவது, இனப்பிரச்சினைக்கு, நீதியான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டால் மட்டுமே, இப்பேச்சுவார்ததைகள் அர்த்தமுள்ள ஓர் சமாதானத்தை நோக்கிய முன் நகர்விற்கு இட்டுச் செல்லும். இவ்வாறான ஓர் தீர்வை முன்வைப்பதற்கு சர்வதேச சமூகம் தற்போது பிரயோகிக்கும் அழுத்தத்தைவிட அதிகமான அழுத்தத்தை இலங்கை அரசு மேல் செலுத்த வேண்டி ஏற்படலாம். அதனைச் செய்ய வேண்டியதும் இன்றைய காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகின்றது.

நன்றி: 'வைகறை' 15.09.2006

1 comment:

Anonymous said...

ம் பரவாயில்ல.