Sunday, November 19, 2006

ரவிராஜின் கொலையும் கறை படிந்த எமது கரங்களும்!

கடந்த வாரம் இலங்கையின் யாழ் மாட்டவ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனம்தெரியாத நபரினால், தலைநகர் கொழும்பில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கை பாதுகாப்புப் படையினரால் தமிழ் மக்களிற்கு எதிராக நடாத்தபடும் வன்முறைகளுக்கெதிராக, அண்மைக்கலாமாக மிக அதிகமாக குரல் கொடுத்து வருபவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக ரவிராஜ் விளங்கினார்.

கொழும்பிலும் அதன் புறநகரங்களிலும் வாழ்ந்து வரும் தமிழர்களையும், தமிழ் வர்த்தகர்களையும் கடத்துதல், பணம் பறித்தல், கொலை செய்தல் போன்ற செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அவற்றுக் கெதிராக கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, சம்பந்தப்பட்வர்களுக்கு ஓரளவேணும் நெருக்கடிகளை கொடுப்பதற்கு ஏதுவாக இருந்தவர்களில் ரவிராஜூம் ஒருவர்.

கொழும்பில் பரவலாக இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்திற்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலங்களின் போது முன்நின்று பங்கேற்பதும், அரசபயங்கரவாதத்திற்கெதிராக கருத்துக்களையும், கோஷங்களையும் எழுப்பியது மட்டுமல்லாமல், சிங்கள வானொலிகளின் நேர்காணலின் போது அரசிற்கெதிராகவும், அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க்குழுக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை கடும் தொனியில் முன்வைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவிராஜ் கொல்லப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தனியார் தொடர்புசாதமொன்று அவரை பேட்டி கண்டது. அதன் போது அவர் இலங்கை ஜனாதபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏ9 பாதை விவகாரம் தொடர்பாக சாவால் விடும் தொனியில் மேற்கண்டவாறு கருத்தினை தெரிவித்திருந்தார். ‘முடிந்தால் ஜனாதிபதி அம்பாந்தோட்டைக்கான தரைவழிப் பாதையை மூடிவிட்டு கடல்; மார்;க்கமாக அப்பகுதிக்கு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கட்டும்’ என்று.

அதுமட்டுமல்லாமல் அவர் கொல்லப்படுவதற்கு முதல் நாள் கொழும்பில் இருக்கும் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் காரியலயத்திற்கு முன்பாக, வாகரையில் நடந்த கொலைச் சம்பவத்திற்கு எதிராகவும் அங்கு பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு அனுப்பப்பட வேண்டியும், இலங்கை அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் ரவிராஜ்.
இச் சம்பவங்களின் பின்னணியிலேயே ரவிராஜின் கொலையைப் பார்க்கவேண்டியுள்ளது.

கொழும்பில் வெளிவரும் ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒன்றின் தகவலின் படி அம்பாறை மாவட்ட பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினருக்கும் இக்கொலைக்கும் தொடர்பிருப்பதாக இலங்கை புலனாய்வுத்துறையினை மேற்கோள் காட்டி அப்பத்திரிகை செய்தி வெளிட்டுள்ளது. ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவையும் ரவிராஜ் அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அரசியல் கொலைகள் இலங்கையில் மிக மலிந்து போய்யிருப்பது கண்கூடு. தனிமனிதன் தொடக்கம் குழுக்கள், அரசியல் கட்சிகள் என்று இலங்கையில் வாழும் எந்த சமூக அமைப்பாக இருந்தாலும், அவர்கள் தம்முடைய கருத்தினை வெளிப்டையாக தெரிவிக்கமுடியாத சூழ்நிலை இன்று எல்லா மட்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும் சரி, தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடுகிறோம் என்று சொல்லும் இயக்கங்களாக இருந்தாலும் சரி, விடுதலைப்புலிகளின் ஜனநாக விரோத செயற்பாடுகளை எதிர்க்கும் ஏனைய குழுக்களாக இருந்தாலும் சரி கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளத் திராணியற்ற சமூகமாக ஒட்டுமொத்த இலங்கையர்களும் மாறிக்கொண்டு வருவது இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக ஐயத்தையே ஏற்படுத்துகின்றது.

இலங்கையின் தலைநகரில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிராயுதபாணியான தமிழ் அரசியல் வாதியின் படுகொலையை உரத்து, எதிர்த்து குரல் கொடுக்க, உலக அரங்கிலே கொலை வெறியர்களை அம்பலப்படுத்த எந்தவொரு நேர்மையுள்ள தமிழனுக்கும் மனச்சாட்சி இடம் தாராது என்பது அப்பட்டமான உண்மை. கருத்து முரண்பாட்டினால் சக நண்பன் தொடக்கம் மாற்று இயக்க உறுப்பினர், தமிழ் தலைவர்கள், அரசியல் எதிரிகள் என்று சகோதப்படுகொலைக் கலாசாரத்தை திறம்படவே கட்டிக்காத்து, அதன்படி வழிநடத்தப்படும் எமது இளைஞர்களை எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எமது கரங்களும், குரல்வளைகளும் கறைபடிந்திருக்கும் போது எப்படி எம்மால் சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு முன்னால் குரல்களை உயர்த்த முடியும்? விடுதலையை நோக்கி நீள வேண்டிய எமது கரங்களின் இடுக்குகளுக்குள் மாற்றுக் கருத்து சகோதரப்போராளியின் குரல் வளை, ஏனைய தமிழ் தலைவர்களின் நெற்றியில் குறிவைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி, அப்பாவி முஸ்லீம் மக்களின் வாழ்வுரிமை….

இவ்வாறாக எம்மைச்சுற்றி அயோக்கியத்தனங்களை
கையகப்படுத்திக்கொண்டு, சர்வதேசமே எம்மை நோக்கிப்பார்! எம்மீது இழைக்கப்டும் அநீதியை இன்னுமா பார்த்துக்கொண்டிருக்கிறாய்! உனது நீதி எங்கே! நியாயம் எங்கே! என்று புலம்பெயர் நாடுகளில் புலம்பிக்கொண்டிருப்பதால் மட்டும் எம்மை ஓடோடி வந்து சர்வதேசம் காப்பாற்ற மாட்டாது. ஏனென்றால் எமது கறை படிந்த கரங்களை அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் தான் அவர்கள் எமது விடையத்தில் நடந்துகொள்வார்கள்.

எனவே எமது கறைபடிந்த கரங்ளை கழுவிக்கொள்ளவும், இனிமேலும் கறைபடியாமல் பார்த்துக்கொள்ளவும் முதலில் கற்றுக்கொள்ளுவோம்.

4 comments:

Anonymous said...

Bullshit

Anonymous said...

//இவ்வாறாக எம்மைச்சுற்றி அயோக்கியத்தனங்களை
கையகப்படுத்திக்கொண்டு, சர்வதேசமே எம்மை நோக்கிப்பார்! எம்மீது இழைக்கப்டும் அநீதியை இன்னுமா பார்த்துக்கொண்டிருக்கிறாய்! உனது நீதி எங்கே! நியாயம் எங்கே! என்று புலம்பெயர் நாடுகளில் புலம்பிக்கொண்டிருப்பதால் மட்டும் எம்மை ஓடோடி வந்து சர்வதேசம் காப்பாற்ற மாட்டாது. ஏனென்றால் எமது கறை படிந்த கரங்களை அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் தான் அவர்கள் எமது விடையத்தில் நடந்துகொள்வார்கள்.
//

அப்படியானால் சிங்களப் பேரினவாதத்தின் பலபத்தாண்டுகால வன்முறையை, கொடுமையை உலகம் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டிருந்ததா? அப்படி இருந்ததால் மட்டும்தான் புலிகள் மீது காட்டமான விமர்சனத்தை உலகம் வைக்கிறதா?
உங்கள் வாதப்படி பார்ததால் புலிகள் மீது எந்த விமர்சனத்தையும் உலகம் வைத்திருக்கக்கூடாதே?
எமது விசயத்தில் எச்சரிக்கையாக இருப்பவர்கள் எப்படி சிங்களவன் விசயத்தில் இல்லாமற் போனார்கள்?
அல்லது உலகம் நேர்மையாக சிங்களப் பேரினவாதத்தைக் கண்டிக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?
ஒரு கொலைக்கு புலிகளுக்குக் கிடைத்தது நாடுகளில் தடை, நிதிமுடக்கம், பயண முடக்கம்.
ஆனால் அதே அரசியற்படுகொலையொன்றுக்காக பேரினவாதத்துக்குக் கிடைப்பது என்ன?
மேலதிக கடனுதவி, ஆயுத உதவி, பயற்சிகள் மற்றும் பொருளாதார உதவிகள்.

Ramesh said...

வணக்கம் பெயரில்லா நண்பரே,

எம்மவர் கொடுமைகளை சொல்லும்போது, சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. ஒருவரின் கொலை அல்ல புலிகளின் மீதான தடை. இவ்வளவு காலமும் சர்வதேசம் புலிகளையும் அரசையும் உன்னிபாக கவனித்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். புலிகள் தாங்கள் ஒரு சிறுபான்மை இனத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பதை உலகிற்கு தவறான முறையில் காட்டிவிட்டார்கள். சகோர இயக்கங்கள் மீதான படுகொலை, தற்கொலைக் கொலையாளிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றியமை போன்ற விடயங்கள் அவர்களால் செய்யப்பட்டவைகளில் சில…

சிங்கள அரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் என்ற தோரணையிலே சர்வதேசம் பார்க்கின்றது. நாடுகளுக்கான உறவின் அடிப்படையிலும்:, பிராந்திய நலன்களின் அடிப்படையிலும் நாடுக்கு நாடு உதவிகள் வழங்குவது இயற்கை.
புலிகள் ஒரு நாட்டுகுள் இருந்து அந்த நாட்டுக்கு எதிராக இயங்கும் அமைப்பு அவர்களுக்கு எந்த நாடும் நேரடியாக உதவி வழங்குவது என்பது அசாதாரணம்.

ஆனால் உங்கள் ஆதங்கம் விளங்கிறது. அது தான் நமது கறை. இன்னும் நமது செயல்களால் நம்மை சிறுமைப்படுத்திக் கொண்டு செல்வதால், நாமே நமக்கு வெட்டும் குழி.
;

Anonymous said...

test