Saturday, April 15, 2006

நெஞ்சு நிமித்தல்.....


சென்ற வாரம்; விடுதலைப் புலிகள் அமைப்பினை கனடா அரசாங்கம் தடைசெய்து, பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் புலிகளையும் சேர்த்துக்கொண்டுள்ள செய்தி யாரும் அறிந்ததே.

புலிகளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுவதற்காக கனடாவின் தற்போதைய கென்சவேட்டிவ் கட்சி அரசாங்கம் பல காலமாக அப்போது ஆட்சியில் இருந்த லிபரல் கட்சிக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தது.

கனடாவில் 250.000க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் புலிகள் ஆதரவாளர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சென்ற வருடம் ரொரண்டோவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையும், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உருவப்படத்தை தமது கைகளில் தாங்கியிருந்த மக்களின் உணர்ச்சி வெளிப்பாட்டினையும் பார்க்கும் போது அதை உணரக்கூடியதாக இருந்தது.

புலிகளோடு மிகத் தொடர்புடைய உலகத்தமிழர் இயக்கமும், அதன் வெளியீடான “உலகத் தமிழர்” பத்திரிகையின் தலைமைக்காரியாலயமும் கனடாவில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. உலகத்தமிழர் இயக்கத்தின் கிளைப்பரிவினரே கனடாவில் விடுதலைப்புலிகளுக்காக பணம் வசூலிப்பவர்கள். இவர்கள் பணம் வசூலிக்க, தமிழர் வீட்டிற்கோ அல்லது தமிழர் நிறுவனங்களுக்கோ செல்லும் முன் அவர்கள் அல்லது அந்நிறுவன உரிமையாளர் தொடர்பான பலமான, பலவீனமான தகவல்களை திரட்டியும் அவர்களோடு எவ்வாறான கோணங்களில் கதைக்க வேண்டும் என்றும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்வதை அவர்களின் செயற்பாடுகளில் இருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது. பல இடங்களில் நட்புரீதியாகவும், நாகரீகமாகவும் பொதுமக்களுடன் நடந்து கொண்டதாகவும், சில இடங்களி;ல் அதிகாரத்துடனும், எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடம் இருந்து அறியக் கூடியதாக இருந்தது.

முழுவிருப்பத்துடன் பணம் வழங்கியவர்கள் ஒரு புறம் இருக்க அனேகமானவர்கள், தமக்கும் ஈழத்தில் வாழும் தமது நெருங்கிய உறவினர்கள் காரணமாகவும், ஈழத்தில் இருக்கும் தமது அசையா, அசையும் சொத்துக்கள் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பயச்சூழலே அவர்களை பணம் வழங்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கியது.

அண்மையில் நண்பர் ஒருவரிடம் கதைத்தபோது அவர் சொன்னார். ‘தானும் புலிகளுக்கு 2500 கனேடிய டொலர்கள் கொடுத்ததாகவும், தனக்கு அப்பணம் கொடுக்கும் அளவிற்கு வசதிகள் இல்லை ஆனால் தனது உறவினர் ஒருவரின் திருமணம் ஈழத்தில் நடைபெற இருப்பதாலும் அதற்கு தான் கட்டாயம் செல்லவேண்டியிருப்பதால், இங்கு பணம் கொடுத்தால் தானே அங்கு பிரச்சனையில்லாமல் பேய்வர முடியும்? அதனால் கொடுத்தேன்’ என்று. (இப்போ அவர் “பின்நம்பர்”க்கு ஓடித்திரிகிறார்)

புலிகளும், புலிகளைச் சார்ந்தவர்களும் தமது அதிகாரப்போக்கினை எல்லா மட்டங்களிலும் பிரயோகிப்பது, அவர்கள் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அறியாமையையே வெளிக்காட்டுகிறது. இது புலிகளுக்கு மட்டுமான ஒன்றல்ல மாறாக தமிழ் சமூக சூழலில் காணப்படுகின்ற ஒரு போக்கு இதை இன்னொரு வகையில் சொன்னால் ‘நெஞ்சு நிமித்தல்’.

இந்த நெஞ்சு நிமித்தல் எல்லா சமயங்களிலும் கைகொடுக்காது இதை புலிகளும், அவர்கள் சார்ந்தவர்களும் உணரவேண்டும். உணரத் தவறியதன் ஒரு வெளிபாடே புலிகளை கனடாவில் தடைசெய்த காரணிகளில் ஒன்று என்பது கலப்படம் அற்ற உண்மை.

5 comments:

Anonymous said...

நல்ல பதிவு வரவிற்கு நன்றி

Anonymous said...

நல்ல பதிவு வரவிற்கு நன்றி

Anonymous said...

நல்ல பதிவு வரவிற்கு நன்றி

Anonymous said...

வணக்கம் நாசமறுப்பான்
கனடாவில் தடை தொடர்பாக நீர் எழுதிய மடல், உம்மை போராட்ட வாழ்வில் சம்பந்தாப்படாத மூன்றாம் மனிதர் போல காட்டிக் கொள்வதாகவே எனக்குப் புலனாகின்றது. இப் போராட்டம் என்னவோ விடுதலைப்புலிகளை மட்டும் சார்ந்தது என்பதாக மட்டும் உமது கருத்து தெளிவிக்கின்றது.

போராட்டத்துக்கு தாலிக் கொடியைக் கூட கழட்டிக் கொடுத்து அதன் வெற்றிக்காக உதவி செய்த மக்களும் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கு பேசவில்லை.

ஈழத்தில் இத்தனை போராளிகளும், மாவீரர்களும் போராட்ட வாழிவில் இணைந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உள்ள சொத்து, வெறுமனே ஒரு சோடி பாதணி, இரண்டு சாரம், இரண்டு சேட், ஆயுதங்கள். இதைத் தவிர வேறு என்ன அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்? உண்மையில் அவர்களுக்கு குடும்பச் சுமைகள் கூட உண்டு. இத்தனைக்கும் அது சம்பளம் அற்ற போராட்டம் தான். (தனிப்பட்ட எண்ணங்களால் இயக்கத்துக்கு பொனவர்களை விடுக. அது 10 வீதம் கூட வராது). அவர்களுக்கு என்ன ஊழா?? இப்படி நின்று தினமும் மரணத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று?

ஆனால் மாதா மாதம் நிதி செய்தால் போரட்டத்துக்கு முழுமையாக சாதித்து விட்டோம் என்று மட்டும் புலம்புதலைப் பார்க்க கேலித்தனமாகத் தோன்றினாலும் மறு புறம் வேதனையாகவும் கிடக்கின்றது. அதிலும் பாதிப்பேர் கொடுப்பது கூட இல்லை.

சுனாமி நடந்த நேரம் நாங்கள் தினமும் எம் ஊர் மக்களாக சேர்ந்து நிதி சேகரித்துக் கொண்டிருந்தோம். பொதுவாக எங்கள் ஊர் மக்களிம் இருந்து தான். அப்போது ஒருவர் வீட்டிற்கு போனோம். (அவர் என் உறவினரும் கூட) அவர் தந்தது வெறும் 20 கனேடிய டொலர்கள் தான். அதாவது ஒரு மணி நேர உழைப்பு. அவர் சொன்னார். "இப்ப தம்பி எனக்கு ரெம்பக் கஸ்டம். வேலையும் இல்லை. ஏதோ அரசாங்கம் தாற பணத்தில் தான் சமானிக்கின்றேன் என்று" நாமும் விட்டு விட்டோம். ஆனால் கொழும்பு சென்ற நேரம் பார்த்தேன். கொழும்பில வீட்டை வாங்கி வைத்திருக்கின்றார் என்று. அதுவும் சுனாமி காலப்பகுதியில் தான் அவர் வாங்கியிருக்கின்றார்.

கொழும்பில் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெகிவளை, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது 4 தொடர்மாடிகள்( வெள்ளவத்தையில் 6 அளவில்) இருக்கின்றன. மொத்தமாகப் பாரத்தால் குறைந்தது 40 000 வீடுகள் இருக்கின்றன. இதுக்கெல்லாம் எங்கிருந்து பணம் போனது என்றால் இந்தப் புலம்பெயர் புண்ணியவான்கள் தான். இப்போது மூன்று அறை வீட்டின் பெறுமதி 90 லட்சத்திற்கு மேல்.

ஆனால் போராட்ட நிதிக்கு கேட்பது வெறும் 2, 500 டொலர்( இலங்கைப் பெறுமதிக்கு 2, 500* 100= 250 000 ரூபா)

இப்போது சொல்லுங்கள்.புலம்பெயர்ந்தவர்களிடம் பணமில்லையா? அப்படி இல்லை என்றால் எவ்வெவ் வழிகளில் நீங்கள் பணம் சாம்பாதிக்கின்றீர்கள்? அரசாங்கத்துக்கு விடும் டூப்புக்கள் என்னென்ன என்று பட்டியலிட முடியும். ஏனென்றால் நானும் புலம்பெயர்ந்தவன் தான்.

எனவே இப்படி நிறையப் பேர்கள் இருக்கின்றார்கள். எனவே இவர் இப்படிப்பட்டவர் என்று ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு கொண்டு இருக்க முடியாது. எனவே சிலவேளைகளில் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுதான் ஆக வேண்டும். இரண்டு பவுண் கொடுங்கள் போராட்ட நிதிக்கு என்று கேட்ட போது கிழிந்த ஆடைகளுடன் அலைந்த ஆட்களையும் பற்றி நாம் அறியாதது அல்ல.


விரும்பினால் கொடுங்கள்!! இல்லாவிட்டால் முடியாது என்று சொல்லுங்கள்.!! புலம்பெயந்து விட்டோம் எமக்கு எனி என்னத்திற்கு தாயகம் என்று கேட்பதாக இருப்பின் கவலைப்படாமல் உங்கள் சுயநலத்தின் முகத்தை அடையாளப்படுத்துவதற்கு தான் இந்த "பின்நம்பர்" முறை.

ஆக விடுதலைப் போராட்ட நிதி உதவி என்பது வெறுமனே உங்கள் குடும்பத்தின் ஆசாபாசங்களைத் தாண்டி மிஞ்சியது தான் என்றால் அது உண்மையான ஆதரவாக்க கருத முடியாது. புலிகள் மீதான தடை நீக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. அதற்காக நீங்கள் என்ன பங்களிப்பை வழங்குவீர்கள் என்பதை வெளிப்படுத்தி மடல் அமையுங்கள் கண்டு கொள்ளலாம்.

ஏகலைவன்

Ramesh said...

வணக்கம் ஏகலைவன். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
என்னிடம் சில கேள்விகள் கேட்டிருந்தீர்கள். 'போராட்டம் விடுதலைப்புலிகள் சார்ந்ததாக மட்டும் இருப்பது போல் எனது கருத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். இதைத்தான் புலிகளும் உணரவேண்டும் விடுதலைப்போராட்டம் தமக்கு மட்டுமானதாக கொள்ளப்படுவது போல் அவர்கள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. புலிகள் மட்டும் ஏகபிரதிநிகளாக இருப்பது நியாயமான ஜனநாயகமாகப்படவில்லை. புலிகள் மற்ற இயக்கங்களை தடைசெய்ததில் இருந்து தமிழர் விடுதலைப்போராட்டத்திற்காக போராட வெளிக்கிட்ட மற்றைய அமைப்புகள் இன்று புலிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களாக மாறியிருக்கிறார்கள். இதற்கு புலிகள் தான் பொறுபேற்க வேண்டும். உதாரணத்திற்கு: கருணாவின் பிரச்சினையை புலிகள் கையாளும் முறையினால் விடுதலைப்போராட்டம் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது அல்லவா!
ஜெனிவாவில் தமிழர் பிரச்சினையை விட கருணா பிரச்சினையே முதன்மை பெற்றிருந்ததை காணக்கூடியதாக இருந்தது அல்லவா? கருணா பிரச்சினைக்காகவா நோர்வே அரசாங்கம் அனுசரணையாளர்களாக வந்தார்கள்?
புலிகள் மீதான தடை நீக்குவதற்கு அனைவர் மீதும் பொறுப்பிருக்கிறது என்றும் அதற்காக எனது பங்களிப்பையும் கேட்டிருந்தீர்கள்.
புலிகள் மீது தடைகள் போடப்பட்டதற்கான காரணிகளை புலிகள் நன்கு ஆராய்ந்து, சர்வதேச சூழலில் அவர்கள் செயற்பாடுகள் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை புலிகள் விரிவாக ஆராயவேண்டும். அது மட்டுமல்லாமல் சர்வதேச பொதுச்சட்டதிட்டங்களின் வளைவு சுழிவுகளை நன்கு அறிந்தும், வெளிநாடு ஒன்றின் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை புலிகள் மதித்து நடக்கப்பழகிக்கொண்டால் புலிகள் மீது தடைகள் வருவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும்.
அடுத்து ஈழத்தில் புலிகளின் செயற்பாடுகள், அதாவது ஜனநாயக விரோத செயற்பாடுகளை நிறுத்தி, வன்முறை மனோபாவத்தில் இருந்து விலகி, சகோதரப் படுகொலைகளை முற்றாக நிறுத்தி, மாற்றுக் கருத்துக்கொண்ட ஏனைய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராட அவர்கள் முயற்சி செய்வார்களேயானால், புலிகள் தமிழர் விடுதலைக்கு இவ்வளவு விலைகொடுக்கத்தேவையில்லை.